பிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க அனுமதி

பிஎம்சி வங்கியில் ரூ.40 ஆயிரம் வரை பணம் எடுக்க அனுமதி

ரிசர்வ் வங்கி பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான வரம்பை 25,000 ரூபாயில் இருந்து 40,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நாட்டின் சிறந்த 10 கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு இந்த வங்கியின் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்திலும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

செப்டம்பர் 23ஆம் தேதி வெளியான ஆர்பிஐ உத்தரவின்படி, பிஎம்சி வங்கியில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு அல்லது பிற டெபாசிட் கணக்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் கணக்கிலிருந்து 1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது எனக் கூறப்பட்டது.

ஆர்பிஐ உத்தரவின் தகவல் வெளியான உடனேயே மும்பையில் உள்ள பிஎம்சி வங்கியின் தலைமையகத்திலும் பிற கிளைகளிலும் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர். அந்த வங்கியின் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் ஆர்பிஐ உத்தரவுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இதனால், பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் சேமிப்பு அல்லது பிற டெபாசிட் கணக்குகளிலிருந்து அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம் என செப்டம்பர் 26ஆம் தேதி ஆர்பிஐ கூறியது. பின்னர் 25 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறியது.

தற்போது, பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு 6 மாதங்கள் வரை அமலில் இருக்கும். அதுவரை 40,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க இயலாது.

ஆர்பிஐ வெளியிட்ட செப்டம்பர் 23ஆம் தேதி அறிவிப்புக்குப் பின் எடுக்கப்பட்ட பணமும் இந்த வரம்புக்குள் வரும். அதாவது, இதுவரை 1000 ரூபாய் மட்டும் எடுத்த வாடிக்கையாளர்கள் ஆறு மாதங்களில் இன்னும் 39,000 ரூபாய் எடுக்கலாம். 10,000 ரூபாய் எடுத்திருப்பவர்கள் மேலும் 30,000 ரூபாய் எடுக்க வாய்ப்பு உள்ளது. 25,000 ரூபாய் எடுத்துவிட்டவர்கள் இன்னும் 15,000 ரூபாய் எடுக்க அனுமதிக்கப்படுவர்.

1984ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட இந்த வங்கி மகாராஷ்டிரா, டெல்லி, கர்னாடகா, கோவா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் 137 கிளைகளைக் கொண்டிருக்கிறது.

இந்த வங்கி அடுத்த 6 மாதங்களுக்கு எந்த கடனும் வழங்கக் கூடாது, ஏற்கெனவே வழங்கிய கடனை புதுப்பிக்கக் கூடாது, எந்த முதலீட்டையும் செய்யக் கூடாது எனக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆர்பிஐ. இவற்றை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்தால் ஆர்பிஐ அனுமதியைப் பெற்றுதான் செய்ய முடியும்.

இதனிடையே, பிஎம்சி வங்கி ஆர்பிஐ விதிகளை மீறி கடன் வழங்குவதற்காக 21,000க்கு மேற்பட்ட போலி கணக்குகள் உருவாக்கியது எனவும் இதன் மூலம் ஹெச்டிஐஎல் உட்பட 44 நிறுவனங்கள் பலன் அடைந்தன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.