``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு!''

``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு!''
``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு!''

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை, புதுச்சேரியில் பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைசாவடிப் பகுதிகளைச் சேர்ந்த மீனவக் குடும்பங்களின் வீடுகளை மொத்தமாகப் பறித்துச் சென்றது.

குடியிருப்பு வேண்டி மக்கள் போராட்டங்கள் நடத்தியதையடுத்து, காலாப்பட்டு சட்டக் கல்லூரியின் பின்புறம், 80 கோடி ரூபாய் செலவில் 1,431 வீடுகளைக் கட்டத் தொடங்கிய புதுச்சேரி அரசு, 2011-ம் ஆண்டு குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்கியது.

`அந்த வீடுகளில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால், மீண்டும் போராட்டத்தில் இறங்கினர் மக்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே, மின்சாரம், குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. எனினும்சிலநாட்களிலேயேமின்சாரமும்குடிநீரும்சரிவரக்கிடைக்காமல் போக, மறுபடியும் போராட்டத்தில் குதித்தனர் மக்கள்.


செயலிழந்துபோன குடிநீர் போர்வெல்களைச் சரிசெய்ய நிதி இல்லை என்று கைவிரித்த நகராட்சி நிர்வாகம், அதற்குப் பதிலாக தனியார் டேங்கர் லாரிகளை வைத்து தண்ணீர் விநியோகம் செய்துவந்தது.

வெறும் ஐந்து லட்சம் ரூபாயில் போர்வெல்களைச் சரிசெய்யாமல், கடந்த இரண்டு ஆண்டுகளில் தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு 53.30 லட்சம் ரூபாயை உழவர்கரை நகராட்சி வழங்கியிருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது.

``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு!''
இதுகுறித்து நம்மிடம் பேசிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள்நலச் சங்கத்தின் தலைவர் குமார், ‘‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக, நகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் நான்கு போர்வெல்கள் அமைக்கப்பட்டன.

அவை ஆழம் குறைவாகப் போடப்பட்டதால், சில மாதங்களிலேயே நீர் கிடைக்காமல் பயன்பாடற்றுப்போயின. ஓர் இடத்தில் 200 அடியில் தண்ணீர் கிடைக்கிறது என்றால், கூடுதலாக 100 அடிகள் வரை பைப்பை இறக்குவதுதான் தொலைநோக்குப் பார்வை. அப்படிச் செய்தால் இவர்கள் சம்பாதிக்க முடியாது என்பதால்தான், 200 அடியோடு நிறுத்திவிடுகிறார்கள். அதனால் சில நாட்களிலேயே தண்ணீர்வரத்து நின்றுவிடும். உடனே புதிய போர்வெல்கள் போடப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் 300 வீடுகளுக்குக் குடிநீர் செல்லவில்லை. வெறும் ஐந்து லட்சம் ரூபாயில் பழைய போர்வெல்களைச் சரிசெய்திருக்க முடியும் என்ற நிலையில், அமைச்சர் ஷாஜகானின் ஆதரவாளர்கள் இருவர் மூலம் டேங்கர் லாரிகளில் தண்ணீர் விநியோகிக்கத் தொடங்கினார்கள்.

அந்த டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு 53.30 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாக, நகராட்சி நிர்வாகமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கூறியிருக்கிறது.

``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு!''
அந்த டேங்கர் லாரிகள், சுனாமி குடியிருப்பிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் இருக்கும் போர்வெல்லில் இருந்துதான் தண்ணீர் எடுத்து வந்து தருகின்றன.

வாரத்துக்கு இரண்டு நடை மட்டுமே தண்ணீர் விநியோகிக்கும் அந்த லாரிகளுக்கு, தினமும் ஐந்து நடை தண்ணீர் விநியோகித்ததாகக் கணக்குக்காட்டி இவ்வளவு தொகையைக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்தப் பணத்தில், புதிதாக 10 போர்வெல்களை அமைத்திருக்கலாம். அமைச்சரின் ஆதரவாளர்களுக்காகத்தான் நகராட்சி நிர்வாகம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறது’’ என்றார் ஆதங்கமாக.

உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, ‘‘இது தவறான குற்றச்சாட்டு. அந்தப் பகுதியில் அனைவருமே தங்கள் வீடுகளில் மின்மோட்டார்கள் பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சுவதால்தான் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால்தான் அப்போது டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.

தற்போது புதிதாக இரண்டு போர்வெல்கள் அமைத்து, குழாய்களை இணைத்திருக்கிறோம். போர்வெல்களின் ஆழத்தைப் பொறுத்தவரை நீரியலாளர்கள் கூறுவதைத்தான் செயல்படுத்துகிறோம்’’ என்றார்.

``ஐந்து லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த, 53.30 லட்சம் ரூபாய் செலவு!''
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுனாமி குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண் பேடி, ‘இந்தப் பகுதியில் காலியாக இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தில் குளம் வெட்டி, மழைக்காலத்தில் கடலில் கலக்கும் மழைநீரைச் சேமித்தால், இவர்களின் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வைக் காணலாம்’ என்றதோடு, சுற்றுவட்டாரங்களில் செயல்படும் தொழிற்சாலைகள், வரையறுக்கப்பட்ட அளவில்தான் நிலத்தடிநீரை உறிஞ்சுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும்படியும் உத்தரவிட்டார்.விரைவில் செயல்படுத்த வேண்டும்.