அப்பல்லோ மருத்துவமனை உடல் இயக்க குறைபாடுகளுக்கான நவீன சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது

அப்பல்லோ மருத்துவமனை உடல் இயக்க குறைபாடுகளுக்கான நவீன சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது

சென்னை, ஏப்ரல் 11, 2019:- ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான மருத்துவமனை குழுமமான அப்பல்லோ மருத்துவமனை, உடல் இயக்கக் குறைபாடுகளுக்கான நவீன சிகிச்சை மையத்தை தென் இந்தியாவில் தொடங்கியுள்ள முதல் மருத்துவமனை என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்த மையம், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் செயல்பாட்டு நரம்பியல் அறுவைசிகிச்சைப் பிரிவின் குழு ஆலோசகர் பேராசிரியர் டாக்டர் பரேஷ்கே. தோஷி முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த விரிவான மையமானது, பார்க்கின் சன்ஸ் நோய் எனப்படும் நடுக்குவாதம் உள்ளிட்ட உடல் இயக்கக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அனைத்து கோணங்களிலும் அதிநவீன மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளையும் அவை தொடர்பான துணை சிகிச்சைகளையும் வழங்கும். 

பார்க்கின் சன்ஸ் எனப்படும் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் இந்தியாவில் தற்போது ஒரு லட்சம் பேருக்கு 300 முதல் 400 பேர் வரை என்ற அளவில் உள்ளது. இது 2030 ஆம் ஆண்டு பல மடங்கு உயரக்கூடும். இந்த நடுக்குவாத நோயானது 60 வயதைத்தாண்டிய முதியோர்களை அதிகம் தாக்கக் கூடிய நீண்டகால நரம்பியல் குறைபாடு ஆகும். மூளையில் 80 சதவீத செல் இழப்பு ஏற்பட்டால் இந்த நடுக்குவாத நோயின் முதல் அறிகுறி தெரியவரும். வழக்கமாக முதலில் இந்த நடுக்குவாத நோயானது உடலின் ஒரு பாகத்தைப் பாதித்து பின்னர் உடலின் இரண்டு பாகங்களுக்கும் பரவக்கூடும். இதனால் உடல் இயக்கத்தில் தளர்வு, கையெழுத்தில் மாற்றம், குரல் மாற்றம், உடல் விறைப்புத்தன்மை உள்ளிட்டவை ஏற்படும்.

அப்பல்லோ மருத்துவமனையின் உடல் இயக்கக் குறைபாடுகளுக்கான நவீன சிகிச்சை மையத்தில் ஆழமான மூளைத்தூண்ட அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் நடுக்குவாதம், செரிப்ரல்பால்சி எனப்படும் பெருமூளை முடக்குவாதம், டிஸ்டோனியா, எசென்ஷியல் டிரெமர், இன்டெராக்டபிள்ஸ் பாஸ்டிசிட்டி டிஸ்கினெஷியா, மன அழுத்தம், நீண்ட கால வலி உள்ளிட்ட பல வற்றுக்கும் இங்கு விரிவான சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த தொடக்க நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ மருத்துவமனையின் செயல்பாட்டு நரம்பியல் அறுவை சிகிச்சைப்பிரிவின் குழு ஆலோசகர் டாக்டர் பரேஷ்கே. தோஷி, “பார்க்கின் சன்ஸ் எனப்படும் நடுக்குவாதம் குறித்த விழிப்புணர்வு தமிழ்நாட்டில் அதிக அளவில் உள்ளது. ஆனால் பல்துறை பராமரிப்புத்தொடர்பான தகவல்கள் மக்களை இன்னமும் அதிக அளவில் சென்றடையவில்லை. நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் மட்டுமே சென்று முழுமையாக சிகிச்சை பெற்று குணம் அடைந்து விட முடியாது. அவர் முழுமையாக குணம் அடைய, பரந்துவிரிந்த சிகிச்சை நடைமுறை தேவை. கடுமையான உடல் இயக்கக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழமான மூளைத்தூண்டல் சிகிச்சை முறை என்பது அதிநவீன சிகிச்சை முறைகளில் ஒன்றாக உள்ளது.” என்றார்.

டிபிஎஸ் எனப்படும் ஆழமான மூளைத்தூண்டல் சிகிச்சை, நடுக்குவாத நோயால் உச்சபட்சமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் போது, மூளையின் முக்கிய செயல்பாட்டுப் பகுதியான தலாமஸ் எனப்படும் நரம்பு முடிச்சு பகுதிக்கு அடுத்துள்ள சப்தலாமிக் நியூக்ளியசில் ஒரு எலெக்ட்ரோடு வைக்கப்படும். நெஞ்சுச்சுவர் பகுதியில் இணைக்கப்படும் பேட்டரியின் மூலம் இந்த எலெக்ட்ரோடு, தொடர்ச்சியாக மின்னணு துடிப்புகளை அனுப்பிக்கொண்டே இருக்கும். இதை வெளிப்புறமாக உள்ள ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்த முடியும்.