ஜீன்ஸ் அணிய தடை, ஆத்திரத்தில் கணவரை கொன்ற மனைவி
ஜார்க்கண்டின் ஜம்தாரா நகரில் ஜோர்பிதா கிராமத்தில் வசித்து வந்தவர் கர்ணேஷ்வர் டுடு. இவரது மனைவி புஷ்பா ஹெம்பிரம். சம்பவத்தன்று, ஜீன்ஸ் அணிந்து கொண்டு புஷ்பா, கோபால்பூர் கிராமத்தில் நடந்த கண்காட்சிக்கு சென்றுள்ளார்.
இதன்பின்னர், புஷ்பா வீடு திரும்பியுள்ளார். அவரை ஜீன்ஸ் உடையில் பார்த்த கணவர் டுடு, அதுபற்றி கேட்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர், ஜீன்ஸ் உடையெல்லாம் அணிய வேண்டாம் என மனைவியிடம் கேட்டு கொண்டார்.
ஆனால், அதனை கவனத்தில் கொள்ளாமல் புஷ்பா தொடர்ந்து ஜீன்ஸ் அணிவதில் விடாப்பிடியாக இருந்து உள்ளார். தொடர்ந்து, இருவருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதில் இரண்டு பேருக்கும் சமரசம் ஏற்படவில்லை. வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த புஷ்பா, தனது கணவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் டுடு படுகாயம் அடைந்து உள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு கொண்டு தன்பாத் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி டுடுவின் தந்தை கூறும்போது, ஜீன்ஸ் அணிவது பற்றி டுடுவுக்கும், மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட மோதலில், டுடுவை மனைவி குத்தி விட்டாள் என கூறியுள்ளார்.
ஜம்தாரா காவல் நிலைய அதிகாரி அப்துல் ரகுமான் கூறும்போது, சம்பவம் பற்றி தகவல் கிடைத்து சென்றோம். தன்பாத்தில் சிகிச்சையின்போது டுடு உயிரிழந்து உள்ளார். தன்பாத்திலேயே எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.