‘பொருள்சார் சிறப்பியல்புகள்’

‘பொருள்சார் சிறப்பியல்புகள்’
Materials Characterization Workshop 2018 in SRM IST

காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள SRM தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வேதியியல் துறையின் சார்பாக ‘பொருள்சார் சிறப்பியல்புகள்’ (Materials Characterization Workshop-MCW-2018) என்னும் தலைப்பில் ஜூலை 26-27 இல் இரண்டுநாள் பயிலரங்கம் முனைவர் தி.பொ. கணேசன் சிற்றரங்கத்தில் நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து 168 பேர் பங்கேற்பாளராகக் கலந்துகொண்டனர்.

இதன் தொடக்கவிழாவில் இப்-பயிலரங்கின் அமைப்பாளரும் SRM IST வேதியியல் துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் ம. அர்த்தனாரீஸ்வரி வரவேற்புரை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. அனந்தநாராயணன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். இவ் விழாவில் சிறப்பு விருந்தினராகப் படப்பையில் அமைந்துள்ள Indian Institute of Biotechnology and Toxicology (IIBT) நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஏ. ரமேஷ் அவர்கள் கலந்துகொண்டார். தனது தொடக்கவுரையில் வேதியியல் பொருள்சார் சிறப்பியல்புகள் குறித்தும் பாதுகாப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஆராய்ச்சியின் நுட்பங்களைப் பற்றிய தனது ஆழமான நுண்ணறிவையும் பகிர்ந்துகொண்டார். நிலையான உலக விவசாயத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் பொருள்சார் பண்புகளில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்கள் உயர்தொழில்நுட்பங்களைப் பற்றி அறிமுகப்படுத்தினர். முதல்நாள் அமர்வுகளில் டாக்டர் உஜ்ஜால் கௌதம் (IISER மொஹாலி), ஏ. சுந்தரேசன் (JNCASR, பெங்களூரு), பேராசிரியர் எம். ஈஸ்வரமூர்த்தி (JNCASR, பெங்களூரு) டாக்டர் கனிஸ்கா பிஸ்வாஸ் (JNCASR, பெங்களூரு) ஆகியோரும் இரண்டாம் நாள் அமர்வுகளில் பேராசிரியர் பி. ராமமூர்த்தி (NCUP, சென்னை), பேராசிரியர் ஏ.ஆர். குல்கர்னி (IIT பம்பாய்) டாக்டர் பால் டேவிஸ் (ஷெல் தொழில்நுட்ப மையம், பெங்களூரு) ஆகியோரும் செயல்முறை அடிப்படையிலான பயிற்சிகளை மிகச் சிறப்பாக வழங்கினர். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மாணவர்கள் என அனைவரும் வேதியியல் துறையின் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றியும் அவற்றின் தொழில்நுட்பங்களைப் பற்றியும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் இப் பயிலரங்கம் சிறப்பாக அமைந்தது.

Materials Characterization Workshop 2018 in SRM IST