சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நவீன இருதய சிகிச்சை அரங்கம்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நவீன இருதய சிகிச்சை அரங்கம்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.25 கோடியில் நவீன இருதய சிகிச்சை அரங்கத்தை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பொன்விழா:

சென்னை எழும்பூரில் 1968-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி 250 படுக்கை வசதிகளுடன் குழந்தைகளுக்கு என்று தனியாக மருத்துவமனை தொடங்கப்பட்டது. தற்போது இந்த மருத்துவமனை 837 படுக்கை வசதியுடன் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.

இருதய சிகிச்சை மையம்:

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று 50-ம் ஆண்டு விழா மற்றும் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார், துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

மருத்துவமனையில் ரூ.25 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன இருதய அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவையும், ரூ. 6 லட்சத்தில் கட்டப்பட்டு உள்ள தோரண நுழைவு 
வாயிலையும், ரூ. 10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மரபணு மற்றும் மூலக்கூறு ஆய்வகத்தையும் முதல் அமைச்சர் திறந்து வைத்தார்.

அஞ்சல் அட்டை:

இதையடுத்து ரூ. 40 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஒலி-ஒளி அரங்கத்தை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள குழந்தைகளுடன் பலூன்களை பறக்கவிட்டு குழந்தைகள் தின விழாவை கொண்டாடினர். பின்னர் அந்த குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கினார்.

மேலும், பொன்விழா நினைவு அஞ்சல் அட்டை மற்றும் பொன்விழா அடையாள சின்னத்தையும் முதல்-அமைச்சர் வெளியிட்டார். 

பிறந்த உடனே இருதய நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சையை சிறந்த முறையில் பெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி தந்துள்ளோம். ஏழை குழந்தைகளுக்கும் உயர்தர சிகிச்சை அளிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து உரிய சிகிச்சை அளித்து நோய் குணமடையக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். 

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், டாக்டர் சி. விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜு, வளர்மதி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர். ஜெ. ராதா கிருஷ்ணன், உணவு பாதுகாப்புத் மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனர் அமுதா மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.