மீண்டும் "நீட்" தேர்வை நடத்தவேண்டும்: இரா.முத்தரசன்

மீண்டும் "நீட்" தேர்வை நடத்தவேண்டும்: இரா.முத்தரசன்
NEET Exam to be conducted again Mutharasan

சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு என்று கூறிவிட்டு, வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. வினாத்தாள் சில மொழிகளில் எளிமையாகவும், வேறு சில மொழிகளில் கடினமாகவும் இருந்துள்ளது. எனவே இத்தேர்வின் அடிப்படையில் நாடு முழுவதும் ஒரே தரவரிசைப் பட்டியல் தயாரித்தால் அது பாரபட்சமாக அமைந்துவிடும். அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்குவதாக இருக்காது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மதுரை ஐகோர்ட்டு கிளை தேர்வு முடிவுகளை வெளியிட இடைகாலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் நீட் நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது.

இப்பிரச்சினையில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு, நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் மூலம் மறுத்தேர்வை நடத்த வேண்டும். வினாத்தாள்களை வெவ்வேறு மொழிகளில் மொழியாக்கம் மட்டுமே செய்ய வேண்டும்.

மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தி, நீட் நுழைவுத் தேர்வு தொடர்பான மசோதாக்களுக்கு உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து விவாதித்திட அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NEET Exam to be conducted again Mutharasan