ஓ.பன்னீர் செல்வம் நிச்சயம் திரும்பி வருவார்: டி.டி.வி.தினகரன்

ஓ.பன்னீர் செல்வம் நிச்சயம் திரும்பி வருவார்:  டி.டி.வி.தினகரன்
O Panneerselvam will definitely come back Says TTV Dinakaran

சென்னை: அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அமைக்கப்பட்டு இருந்த குழுவை கலைப்பதாக ஓ.பன்னீர் செல்வம் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

இணைப்புக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் ஏன் பேசினார் என்று தெரியவில்லை. அவர் தனது முடிவை மாற்றிக் கொள்வார் என நான் எதிர்பார்க்கிறேன். அவரது தனது நிலையை மாற்றி விரைவில் திரும்பி வருவார்.

அ.தி.மு.க.வின் 3-வது அணி என்று ஒன்று இல்லை. ஓ.பன்னீர் செல்வம் தன்னுடன் எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளார்.

நான் அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் மீது உயர்ந்த மதிப்பு வைத்துள்ளேன். அவர் எனக்கு சிறந்த நண்பரும்கூட. அவர் உறுதியாக விரைவில் திரும்பி வருவார் என்று நம்புகிறேன். அ.தி.மு.க.வில் 90 சதவீத கட்சியினரும், நிர்வாகிகளும் எங்களுடன் தான் உள்ளனர்.

இரு அணிகளையும் இணைய வைக்க வேண்டும் என்பதை எனது உறுதியான கடமையாக கருதுகிறேன். நான் டெல்லி செல்வ தற்கு முன்பு கட்சியில் உள்ள சில தலைவர்கள் கட்சி அணிகள் இணைவதற்கு வசதியாக நான் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

எனவே, தான் ஒதுங்கி இருந்தேன். நான் டெல்லியில் இருந்து திரும்பி வந்த போது இங்கு எதுவுமே நடக்கவில்லை. நிலைமை மோசமாக இருந்தது. கட்சி அணிகளை ஒருங்கிணைப்பது எனது பொறுப்பு என்று கருதினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

O Panneerselvam will definitely come back Says TTV Dinakaran