தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு - 1 பலி

தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு - 1 பலி
Police firing again in Thoothukudi youth dies

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர்.

ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

Police firing again in Thoothukudi youth dies