இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
Rupee Sinks to record low vs US Dollar breaches 69 rupees

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இது தவிர இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.

ஜூன் 19-ஆம் தேதி அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.61 என்ற அளவிற்கு சரிந்திருந்தது. இது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக கருதப்பட்டது. அதன்பின்னர் சிறிது ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு நேற்றைய வர்த்தக நேர முடிவில் 68.61 ஆக நிலைபெற்றது.

ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கி, அந்த நாட்டை தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் தொடக்கமாக, கூட்டணி நாடுகள் அனைத்தும் ஈரானிடம் இருந்து நவம்பர் மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று கூறியிருந்தது. இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது என்றும், இதை மீறினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டது.

இதுபோன்ற காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடுமையாக சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின்போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து 68.89 ஆக இருந்தது. அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே மேலும் சரிந்து 69.10 என்ற நிலையை எட்டியது. இது வரலாறு காணாத சரிவு ஆகும்.

Rupee Sinks to record low vs US Dollar breaches 69 rupees