‘‘தமிழ்க் கவிதையியல்’’

‘‘தமிழ்க் கவிதையியல்’’

SRM அறிவியல் மற்றும் கலையியல் புலத்தின் தமிழ்த்துறையின் சார்பில் ‘‘தமிழ்க் கவிதையியல்’’ என்னும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் 19.03.19 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள SRM மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. தொடக்க விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.ஜெய்கணேஷ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். புலத் தலைவர் முனைவர் ஜெ. ஜோதிக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.

முதல் அமர்வில் சிறந்த கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமாகிய திரு. ரவிசுப்பிரமணியன் அவர்கள் ‘கவிதைகள் என்ன செய்யும்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். எளிதான பொருத்தமான எடுத்துக்காட்டுகள் நிறைந்ததாக இவருடைய உரை அமைந்திருந்தது. இரண்டாயிரமாண்டு வரலாற்றைக் கொண்ட தமிழ்க் கவிதை வரலாற்றை மிக அற்புதமாக எடுத்துக்கூறினார்.

தொடர்ந்து எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான திரு. தஞ்சாவூர்க் கவிராயர் அவர்கள் ‘யாதும் ஊரே யாவரும் கவிஞர்’ என்னும் தலைப்பில் மிக அற்புதமான பொழிவை நிகழ்த்தினார். மாணவர்கள் மனங்கொள்ளத்தக்க வகையிலான அரிய பல கருத்துகளை முன்வைத்தார். நீண்ட தொடர்ச்சியைக் கொண்ட தமிழ்க் கவிதைகளைக் குறித்த ஆழமான புரிதல்களை இவர்களின் உரை ஏற்படுத்தியது.

பிற்பகல் அமர்வில் எழுத்தாளரும், திரைக்கலைஞருமாகிய திரு. ராஜா சந்திரசேகர் அவர்கள் ‘‘கவிதைக்குள் நகரும் சித்திரங்கள்’’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இவருடைய பேச்சின் இடையில் திரையிடப்பட்ட கவிதைகளுக்கான காட்சிப் படங்கள் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஒட்டுமொத்தமாக நோக்குகையில் தமிழ்க் கவிதையியலின் நெடிய வரலாற்றை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் இக்கருத்தரங்கம் அமைந்திருந்தது. 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலதுறையைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பயனடைந்தனர்.