பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
TN CM Palaniswami urges PM not to privitise Salem Steel plant

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

சேலத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சேலம் இரும்பு உருக்காலையை தனியார் மயமாக்கப் போவதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இந்த வி‌ஷயத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

சேலம் இரும்பாலை உயர் தரம் கொண்ட இரும்புகளை உற்பத்தி செய்து உலக அளவில் புகழ்பெற்ற ஒன்றாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மத்திய அரசு ஆலைகளான என்.எல்.சி., பெல், ரெயில் பெட்டி தொழிற்சாலை போன்றவற்றுடன் சேலம் உருக்காலையும் புகழ்பெற்ற ஒன்றாக இருக்கிறது.

சேலம் இரும்பாலை அமைப்பதற்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு 9 கிராமங்களை சேர்ந்த 15.5 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து வழங்கியது.

ஆனால், இன்று அந்த ஆலையை தனியார்மயமாக்கப் போவதாக கூறுவதால் அந்த பகுதி மக்கள் மிகுந்த வேதனையிலும், பதட்டத்திலும் உள்ளனர்.

இந்த ஆலையால் அந்த பகுதியை சேர்ந்த 2 ஆயிரம் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் இந்த ஆலையை நம்பி பல்வேறு துணை தொழில்களும் அங்கு உள்ளன.

இந்த ஆலைக்காக தமிழக அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி உள்ளது.

அதன்படி ரூ.2005 கோடி அளவுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்க பணிக்கும் தமிழக அரசு பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளது.

இந்த நேரத்தில் ஆலையை தனியார்மயமாக்கப் போவதாக கூறுவதால் மாநில மக்கள் மத்தியில் பீதியும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது.

அந்த ஆலையில் சமீப காலமாக நஷ்டம் ஏற்படுவது குறித்து உரிய ஆய்வு நடத்தி மேல் நடவடிக்கை எடுத்தால் நிச்சயமாக மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும். லாபத்தில் இயக்க முடியும்.

எனவே, பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு இரும்பு கழகத்திடமும், மத்திய இரும்பு துறையிடமும் பேசி மறு ஆய்வு செய்ய வேண்டும். தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

TN CM Palaniswami urges PM not to privitise Salem Steel plant