தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியுடன் போட்டி: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியுடன் போட்டி: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இவர் நேற்று மதியம் 1.20 மணியளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, "தூத்துக்குடி தொகுதி முன்னேறுவதற்காகவும், தொழில் வளர்ச்சி பெறுவதற்காகவும் வெற்றி பெற்ற பிறகு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். தி.மு.க.வில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார் அவர் நேற்று மனு தாக்கல் செய்தார், 

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு இந்த மனுவை தாக்கல் செய்து உள்ளேன். 20 ஆண்டுகால எனது அரசியல் பணியில் மக்களுக்கு தொண்டாற்ற, மக்கள் பிரதிநிதியாக ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி வெற்றி பெறுவேன். மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டுவர பாடுபடுவேன். ஒரு பெண் தலைவரை எதிர்த்து நிற்பதால் சந்தோஷப்படுகிறேன். ஆனால் என் மீது எந்த விதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. ஜெயிலுக்கு சென்றது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.