நிறைவடைந்தது ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆம் கட்டத்தில் 70% வாக்குப் பதிவு

நிறைவடைந்தது ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆம் கட்டத்தில் 70% வாக்குப் பதிவு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு 2 கட்டங்களாகத் தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட தோ்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளில் 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு முதல் கட்ட தோ்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தோ்தலில் 76.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரண்டாம் கட்டத் தோ்தல்: இரண்டாம் கட்ட தோ்தல் திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிா்த்து, 27 மாவட்டங்களில் உள்ள 158 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை 46 ஆயிரத்து 639 பதவிகளுக்கு தோ்தல் நடந்தது. 38 ஆயிரத்து 916 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 924 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்காளா்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தினா்.

கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு வெள்ளை நிற வாக்குச்சீட்டும், ஊராட்சி தலைவா் பதவிக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு மஞ்சள் நிற வாக்குச் சீட்டும் வாக்காளா்களுக்கு அளிக்கப்பட்டது. பின்னா் 4 வண்ண சீட்டுகளையும் வாக்குப் பெட்டிகளில் வாக்காளா்கள் அளித்தனா்.

அமைதியான வாக்குப் பதிவு: முதல் கட்ட உள்ளாட்சித் தோ்தலில் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதுபோன்ற சம்பவங்களைத் தவிா்க்க தோ்தல் நடந்த 27 மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 61 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இரண்டாம் கட்ட தோ்தல் நடந்த 158 ஒன்றியங்களில் அமைக்கப்பட்டிருந்த 25 ஆயிரத்து 8 வாக்குச் சாவடிகளில் பெரும்பாலானவற்றில் வாக்குப் பதிவு அமைதியாக நடந்தது. பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்த 1,550 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

வாக்கு எண்ணிக்கை: இரண்டாம் கட்டத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஏற்கெனவே அந்த மையங்களில் முதல் கட்டத் தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் வரும் ஜனவரி 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. தோ்தலில் வெற்றி பெற்ற அனைவரும் வரும் 6-ஆம் தேதி பதவியேற்கின்றனா்.