`பேச்சைத் திரும்பப் பெறப்போவதில்லை!'- கடுகடுக்கும் சீமான்; கொந்தளிக்கும் காங்கிரஸ்
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர். அதேபோல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், ``நாமெல்லாம் திராவிடர்கள் என்று கூறிவந்தார்கள். திராவிடர் என்பதும் திராவிடம் என்பதும் தமிழ்ச் சொல்லே இல்லை.
சீமான்:அது சம்ஸ்கிருதச் சொல். அப்புறம் தமிழர் என்று கூறினால் பிராமணர்களும் தமிழர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்று கூறினார்கள். ஆனால், தமிழர்கள் என்றால் இவர்கள் உள்ளே வரமுடியாது என்பதால் திராவிடம் என்று சொல்லி அனைவரும் உள்ளே வந்துவிட்டார்கள்.
இப்போது நடுமண்டையில் ஏறி ஓங்கி அடித்ததும், திராவிடம் என்றவர்கள் எல்லாம் தெறித்து ஓடிவிட்டார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். அமைதிப்படை என்ற பெயரில் ஓர் அநியாயப்படையை அனுப்பி, என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்" என்றார்.
ராஜீவ்காந்தி கொலைக்கு விடுதலைப் புலிகள் காரணம் எனக் கூறப்பட்டாலும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதுவரை அந்தக் குற்றத்துக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சீமான் இப்படிப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, சீமானின் பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் சூழலில் அவர் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவல்களை அடுத்து சீமான் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மீண்டும் பேசியுள்ள சீமான் ``ராஜீவ் காந்தியை நாங்கள் கொன்றது சரிதான் எனப் பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை. 25 ஆண்டுக்காலமாக இதைத்தான் பேசி வருகிறேன். காங்கிரஸார் போராடுவது மகிழ்ச்சியைத் தருகிறது. எந்த விஷயத்துக்காக இதுவரையில் காங்கிரஸ்காரர்கள் போராடியுள்ளனர்.
சீமான்:இப்போது என்னை சிறையில் தள்ள காங்கிரஸ் போராடி வருகிறது. உள்ளே இருக்கும் சிதம்பரத்தை வெளியே எடுத்துவிட்டு என்னை உள்ளே தள்ளப் போராடுகிறார்கள். 28 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்திருப்பதை எப்படி பொறுத்துக்கொள்வது. இந்த விவகாரத்தில் விவாதத்துக்குத் தயாராக உள்ளேன். இலங்கையில் இந்திய அமைதிப்படை என்ன செய்தது என்பதை விவாதிக்க வருவார்களா அவர்கள்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.