அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் என்பது தனியார் பள்ளிகள் இயக்ககம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து வகைத் தனியார் சுயநிதிப் பள்ளிகளை நிர்வகிப்பதற்கும் ஒழுங்குமுறைப் படுத்துவதற்கும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டம், 2018 இயற்றப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி அனைத்து வகைத் தனியார் சுயநிதிப் பள்ளிகளும் ஒரே இயக்ககத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் என்பது தனியார் பள்ளிகள் இயக்ககம் எனப் பெயர் மாற்றம் செய்யப்படும்.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு திருக்குறள் புத்தகம்
உலகப் பொதுமறை எனும் சிறப்பு மிக்க நூலான திருக்குறளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய உரை வடிவில் உருவாக்கி அதனை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வாயிலாக அச்சிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
இத்திட்டம் ரூ.27.00 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
குடியிருப்பு வளாகங்களில் சமுதாய நூலகம் அமைத்தல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகியுள்ள நிலையில், வீடெங்கும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் விதமாக, குடியிருப்பு வளாகங்களில் குடியிருப்போர், பொது நூலகத் துறைக்கு குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.20,000 மற்றும் நூலகம் செயல்படுவதற்கான அறை மற்றும் தளவாடப் பொருட்களை வழங்கும் பட்சத்தில், அருகாமையிலுள்ள பொது நூலகங்கள் மூலம் நூல்கள் மற்றும் இதழ்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.