முதல் 20 ஓவர் போட்டி: இந்தியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
ரோகித் சர்மா நாளைய 20 ஓவர் போட்டியில் இடம்பெறுவாரா? என்பது உறுதியில்லை.
சவுத்தம்டன்: இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 378 ரன் இலக்கை எட்டி பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட இந்த போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நாளை (7-ந் தேதி) நடக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா கொரோனா பாதிப்பு காரணமாக டெஸ்டில் விளையாடவில்லை.
அதில் இருந்து குணமடைந்து விட்டாலும் நாளைய 20 ஓவர் போட்டியில் இடம்பெறுவாரா? என்பது உறுதியில்லை. அவர் ஆடாமல் போனால் ஹர்த்திக்பாண்ட்யா தலைமை தாங்கலாம். ஏற்கனவே அவர் அயர்லாந்துக்கு எதிரான தொடருக்கு கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தார். 2 ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றி இருந்தார். டெஸ்டில் ஏற்பட்ட மோசமான தோல்வியில் இருந்து மீண்டு இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். டெஸ்டில் ஆடிய விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஆகியோர் முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை.
பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாகும். ஜேசன் ராய், மொய்ன்அலி, லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், சாம்கரண் போன்ற சிறந்த வீரர்கள் இந்த அணியில் உள்ளனர். இரு அணிகள் இடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் சொந்த மண்ணில் நடந்த 20 ஓவர் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளும் நாளை மோதுவது 20 ஓவர் போட்டின் 20-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 19 ஆட்டத்தில் இந்தியா 10-ல், இங்கிலாந்து 9-ல் வெற்றி பெற்றுள்ளன. நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. சோனிடென் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.