அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்
ஜெருசலேம்: அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை நேற்றுமுன்தினம் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து செங்கடலில் செல்லும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த நவம்பரில் இருந்து இதுவரை 50 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இன்னொரு கப்பலை மூழ்கடித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் எம்க்யூ-9 ரீப்பர் வகை டிரோன் ஒன்றை நிலத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலம் தாக்கி அழித்துள்ளதாக ஹவுதி போராளிகள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ஹவுதிகள் வெளியிட்டுள்ளனர்.ஏமன் நாட்டில் ஹவுதிகளின் தாக்குதலுக்கு இதுவரை 5 டிரோன்களை அமெரிக்கா இழந்துள்ளது. அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் பிரையன் மேக்கேர்ரி கூறுகையில்,‘‘ அமெரிக்க விமான நடைக்கு சொந்தமான எம்க்யூ- 9 டிரோன் ஒன்று ஏமனில் விபத்துக்குள்ளானது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார். ஹவுதி படையினர் அதை சுட்டு வீழ்த்தினரா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.