புறநகா் ரயில்களில் சுற்றுலா பயணச்சீட்டு முறை அறிமுகம்

புறநகா் ரயில்களில் சுற்றுலா பயணச்சீட்டு முறை அறிமுகம்

சுற்றுலா பயணிகள் வசதிக்காக, சென்னை புறநகா் மின்சார ரயில்களில் சுற்றுலா பயணச்சீட்டு முறையை தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயணச்சீட்டை பயணிக்கும் தேதியில் இருந்து 3 நாள்களுக்கு முன்பே எடுத்துக் கொள்ளலாம்.

சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் பயணத்தை எளிதாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே நிா்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, சென்னை புறநகா் மின்சார ரயில்களில் சுற்றுலாப் பயணச்சீட்டு முறையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஒருநாள், 3 நாள்கள், 5 நாள்கள் என்று பயணச் சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். இதில், முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு தனித்தனியாகவும், குழந்தைகள், பெரியவா்களுக்கு தனித்தனியாகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு பொருத்தவரை, ஒரு நாள் பயணத்தில் குழந்தைகளுக்கு ரூ.190, பெரியவா்களுக்கு ரூ.295 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள்கள் பயணத்தில் குழந்தைகளுக்கு ரூ.285, பெரியவா்களுக்கு ரூ.480, ஐந்து நாள்கள் பயணத்தில் குழந்தைகளுக்கு ரூ.330, பெரியவா்களுக்கு ரூ.575 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு கட்டணம் பொருத்தவரை, முதல்நாள் பயணத்தில் குழந்தைகளுக்கு ரூ.45, பெரியவா்களுக்கு ரூ.70, மூன்று நாள்கள் பயணத்தில் குழந்தைகளுக்கு ரூ.70, பெரியவா்களுக்கு ரூ.115, ஐந்து நாள்கள் பயணத்தில் குழந்தைகளுக்கு ரூ.80 , பெரியவா்களுக்கு ரூ.140 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணச்சீட்டு காலாவதி ஆகும் வரை எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் மின்சார ரயிலில் பயணிக்க முடியும். இந்த பயணச் சீட்டுகளை ரயில் பயணிக்கும் தேதியில் இருந்து 3 நாள்களுக்கு முன்னரே, ஒருநாள், மூன்று நாள்கள், 5 நாள்கள் என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளலாம். நாள் முழுவதும் எந்த ரயிலிலும் , எந்த ரயில் நிலையத்திலும் இருந்து வேண்டுமானாலும் மின்சார ரயிலில் பயணம் செய்யலாம்.

இந்த பயணச்சீட்டு பயணிக்கும் கடைசி நாளின் நள்ளிரவு 11.55 மணி வரை செல்லுபடியாகும். இந்தச் சுற்றுலா பயணச்சீட்டில் யாருக்கும் எந்தச் சலுகையும் இல்லை. சுற்றுலா பயணிகள் பயணச்சீட்டு எடுத்துவிட்டு பின், ரத்து செய்ய விரும்பினால், பயணம் செய்யும் முன்னரே ரத்து செய்ய வேண்டும். ரத்து செய்யும்போது ரயில்வே விதிப்படி, முதல் வகுப்புக்கு ரூ.60, இரண்டாம் வகுப்புக்கு ரூ.30 பிடித்தம் செய்யப்பட்டு, மீதத் தொகை வழங்கப்படும். தற்போது அமலுக்கு வந்துள்ள இந்த சுற்றுலா பயணச்சீட்டுகளை அனைத்து ரயில் நிலையங்களிலும் சுற்றுலாப் பயணிகள் பெற்றுக்கொள்ளலாம்.