இறுதிப்போட்டியில் ஒரு ரன்னில் தோற்றது வருத்தமளிக்கிறது: டோனி

இறுதிப்போட்டியில் ஒரு ரன்னில் தோற்றது வருத்தமளிக்கிறது: டோனி

ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. 

தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:-  "ஒரு அணியாக இந்த தொடர் சென்னை அணிக்கு சிறப்பாக இருந்தது. ஆனால், இந்த தொடரில் நாங்கள் கடந்த ஆண்டுகளைப் போல மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு வரவில்லை. மிடில் ஓவர்களில் எங்கள் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. இன்று இரண்டு அணிகளும் நிறைய தவறுகளை செய்தோம். 

ஆனால் எங்களை விட மும்பை அணி குறைவான தவறுகளை செய்ததால் வெற்றி பெற்றார்கள். எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இந்த மைதானத்தில் 150 ரன்கள் என்பது கண்டிப்பாக எட்டக்கூடிய இலக்கு தான்.

இதுபோன்ற குறைவான இலக்கில் இறுதிப்போட்டியில் எதிரணியை சுருட்டுவது என்பது கடினம். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் அதனை சிறப்பாக செய்தனர். பேட்டிங்கில் சற்று சுமாராக செயல்பட்டு ஒரு ரன்னில் தோற்றது வருத்தமளிக்கிறது. போட்டியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களில் காரணம் என்பதால் அடுத்த தொடரில் கண்டிப்பாக அவர்கள் ரன்களை குவிப்பார்கள்" என்று டோனி கூறினார்.

பின்னர், டோனியிடம் வர்ணணையாளர் அடுத்த ஐபிஎல் தொடரில் உங்கள் ஆட்டத்தை காண முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டோனி, ஆமாம் என நம்புகிறேன் என்று பதிலளித்தார்.