திருமண மத மாற்றத்துக்கு தடை உபி. சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் விசாரணை

திருமண மத மாற்றத்துக்கு தடை உபி. சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  விரைவில் விசாரணை

திருமண மத மாற்றத்துக்கு தடை உபி. சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை

புதுடெல்லி: திருமணத்துக்காக கட்டாய மத மாற்றப்படுவதை தடுப்பதற்காக உத்தர பிரதேச அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணத்துக்காக கட்டாய மத மாற்றம் செய்யப்படுவதை தடுப்பதற்கான அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வேற்று மதத்தை சேர்ந்த ஆணையோ அல்லது பெண்ணையோ திட்டமிட்டு காதலித்து, பின்னர் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க, இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த திருமணத்தையும் ரத்து செய்ய முடியும். இதே போன்ற சட்டத்தை பாஜ ஆளும் மற்ற மாநிலங்களும் கொண்டு வர திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று பல்வேறு தரப்பினர்  பொதுநலன் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில், உத்தரப் பிரதேச அரசு அமல்படுத்தி உள்ள இந்த ஒருதலைப்பட்சமான சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மனுக்கள் அவசர வழக்கான விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

* முதல் கைது
உத்தர பிரதேசத்தில் திருமணத்துக்காக கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுப்பதற்கான சட்டம் அமலான மறுநாளே, பிரெய்லியை சேர்ந்த ஓவைஸ் அகமது என்பவர் மீது வழக்கு பதியப்பட்டது. அதில், அப்பகுதியை சேர்ந்த பெண்ணின் தந்தை ஒருவர், தனது மகளை ஓவைஸ் குடும்பத்தினர் அவருடைய விருப்பத்திற்கு மாறாக, இஸ்லாம் மதத்துக்கு மாறும்படி வற்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. புகார் அளித்த தகவல் தெரிந்து, தலைமறைவான ஓவைசை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இச்சட்டத்தின் கீழ் செய்யப்படும் முதல் கைது இதுவாகும்.