போதையில் வாகனம் ஓட்டிய 772 பேரிடம் ரூ.80.55 லட்சம் அபராதம் வசூல்: அபராதம் செலுத்தாதவர்களின் 311 வாகனங்கள் பறிமுதல்

போதையில் வாகனம் ஓட்டிய 772 பேரிடம் ரூ.80.55 லட்சம் அபராதம் வசூல்: அபராதம் செலுத்தாதவர்களின் 311 வாகனங்கள் பறிமுதல்
போதையில் வாகனம் ஓட்டிய 772 பேரிடம் ரூ.80.55 லட்சம் அபராதம் வசூல்: அபராதம் செலுத்தாதவர்களின் 311 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் போதையில் வாகனம் ஓட்டிய 772 நபர்களிடம் ரூ.80.55 லட்சம்  அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றம் எச்சரித்தும் அபராதம் செலுத்தாக 311 நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லையில் போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது விதிக்கப்படும் அபராதம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்ட பிறகு, பலர் போலீசாரிடம் சிக்கும் போது, அபராத தொகையை நீதிமன்றத்தில் கட்டுவதாக கூறி விட்டு அதற்கான சலான்களை வாங்கி செல்கின்றனர்.

ஆனால் அதன்படி, அபராத தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாநகர காவல் எல்லையில் போதையில் வாகனம் ஓட்டியதாக நேற்று வரை 8,655 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராத தொகை வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராத தொகையை வசூலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 10 போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம், அபராதம் செலுத்தாத சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போன் செய்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையில் 10 போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் நினைவூட்டலை தொடர்ந்து 574 பேர் போக்குவரத்து காவல் சிறப்பு மையங்களில் ஆஜராகி நிலுவையில் உள்ள வழக்குகளை இணையதளம் மூலம் தங்களது அபராத தொகையை செலுத்தினர். மேலும், 198 வாகன ஓட்டிகள் நீதிமன்றங்கள் மற்றும் தபால் நிலையங்கள், இ-சென்டர்கள் மூலம் தங்களது அபராத தொகையை செலுத்தியுள்ளனர்.

அந்த வகையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 772 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அபராத தொகையாக 80 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாயை போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளனர். மதுபோதையில் வாகனம் ஓட்டி நீதிமனறம் அறிவித்தும் தங்களது அபராத தொகையை செலுத்தாத 311 நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.