2020-ல் இந்தியா - சீனா உறவில் புதிய உயரம்: சீனத் தூதர் வாழ்த்து
2020-ல் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு புதிய உயரத்தை எட்டும் என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் தூதர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங் தனது புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியாவுக்கான சன் வெய்டாங் தனது ட்விட்டர் பக்கத்தில், “ உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2019-ல் இந்தியா - சீனா இடையே நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இரு நாட்டுத் தலைவர்களிடம் நடந்த சந்திப்புகள் உட்பட பல நிகழ்வுகள் உதாரணமாகி உள்ளன.
2020-ல் சீனா-இந்தியா இடையேயான ராஜதந்திர உறவின் 70-வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது . இது தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இரு நாடுகள் தரப்பிலும் நடைபெறும்.
இரு நாட்டுத் தலைவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, எதிர்காலத்தில் இருதரப்பு உறவுகளையும் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல கூட்டு முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.