தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 23) சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்துதல் குறித்து பேசியதாவது:
இந்தியாவில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 75 மாவட்டங்களில், தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சில வழிமுறைகளை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த, நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகிறது.
மத்திய அரசால் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, தொற்று நோய்கள் சட்டம், 1897-ல் ஷரத்து 2 இன்படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது.
அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார்கள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.