ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன் சேவை தொடங்கியது

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன் சேவை தொடங்கியது

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் மொபைல் போஸ்ட்பெய்ட் சேவைகள்மீட்டமைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 (Article 370) ரத்து செய்யப்பட்டதிலிருந்து, காஷ்மீரில் முன்னெச்சரிக்கையாக மொபைல் போன் சேவைகள் மற்றும் இணைய வசதிகள் நிறுத்தப்பட்டன.

ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இப்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

கடந்த 21 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால், திங்கள் (அக்டோபர் 14) முதல் ஜம்மு-காஷ்மீரில் போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகள் மீண்டும் செயல்படும் என்ற தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த நிலையில், சுமார் 70 நாட்களுக்குப் பிறகு மீண்டும் செல்போன் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ஆரம்பத்தில் பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் சேவைகளுக்கும் மட்டும் மீண்டும் இணைப்பை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பல உள்ளூர்வாசிகளிடம் பி.எஸ்.என்.எல் போஸ்ட்பெய்ட் இல்லாததை கருத்தில் கொண்டு, அனைத்து போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகள் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இணைய வசதியை மீண்டும் தொடங்குவது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. ஆகஸ்ட் 5 முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இணைய சேவைகளும் மூடப்பட்டுள்ளன.