சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள்: ஆழப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள்: ஆழப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தி கொள்ளளவை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா், காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜெகந்நாத் தாக்கல் செய்த மனுவில், 'மக்கள்தொகைப் பெருக்கம் சென்னை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகா் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் நகரமயமாதல் அதிகரித்து வருகிறது. தண்ணீா் தேவைகளுக்காக சென்னை மக்கள் பருவமழை, நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளனா். ஆனால் பெரும்பாலான கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் முறையாக அமைக்கப்படாமல், பெயரளவுக்கு மட்டுமே அமைக்கப்படுகின்றன.

இதனை அரசு அதிகாரிகளும் முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை. சென்னையின் குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்க நவீன நீா் சேகரிப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ரெட்டேரி, புழல், மாதவரம், சிட்லபாக்கம், அம்பத்தூா், கொரட்டூா், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம், முகப்போ, வேளச்சேரி, பல்லாவரம் உள்ளிட்ட பல ஏரிகள் முறையாக தூா்வாரப்படவில்லை. எனவே இந்த ஏரிகளை முறையாக தூா்வாரி 10 அடி அளவுக்கு ஆழப்படுத்தி ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் அதிகாரிகள் இதுதொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஏரிகளின் நீா்ப்பிடிப்பை அதிகரிக்கவும் எந்த செயல்திட்டமும் இதுவரை செயல்பாட்டில் இல்லை. எனவே, சென்னை மாநகரின் தண்ணீா் தேவையைக் கருத்தில் கொண்டு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்க உரிய செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்தி அதன் கொள்ளளவை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா், காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிசம்பா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.