விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பலி : பொதுமக்கள் சாலை மறியல்
கும்பகோணம்:கடந்த 2 நாட்களாக கும்பகோணம் ரெயில் நிலையம் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதாக புகார் வந்தது. இதனால் பராமரிப்பு பணிக்காக மேற்பார்வையாளர் ராஜா தலைமையில், துப்புரவு தொழிலாளர்கள் விபுத்ரன், வீரமணி, பாக்யராஜ், சாதிக்பாட்சா ஆகியோர் நேற்று மாலை ரெயில் நிலையம் அருகே பாதாள சாக்கடை பராமரிப்பு பணியை தொடங்கினர்.
அப்போது பிளாஸ்டிக் பைப்பால் பாதாள சாக்கடையின் அடைப்பை சரி செய்ய சாதிக்பாட்சா உடைகளை கழற்றிவிட்டு பணியில் ஈடுபட்டார் அப்போது எதிர்பாராதவிதமாக சாக்கடையில் இருந்து விஷவாயு தாக்கியதில் மயங்கிய சாதிக்பாட்சா பாதாள சாக்கடைக்குள் விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சாதிக்பாட்சாவின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சாதிக்பாட்சா மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.