வகுப்பறையில் பாம்புக் கடித்து மாணவி பலி: கடும் நடவடிக்கைக்கு கேரள முதல்வர் உறுதி
கேரள மாநிலத்தில் வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில், அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஷேஹலா என்ற மாணவி 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார். அங்கு தனது வகுப்பறையில் இருந்து பாடத்தை கவனித்து கொண்டிருந்தார்.
அப்போது வகுப்பறைக்குள் வந்த பாம்பு ஒன்று அவரைக் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த சக மாணவர்கள் ஆசிரியையிடம் தெரிவித்தனர். எனினும் அந்த ஆசிரியை, மாணவி ஷேஹலாவை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள் என்று கூறிவிட்டு பாடத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஷேஹலாவை ஒரு மணி நேரத்திற்கு பிறகே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். நேரமானதால் விஷம் அதிகரித்து மாணவி ஷேஹலா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தப் பள்ளியில் சிறுமி அமர்ந்து இருந்த இடத்திற்கு கீழ் ஒரு சிறிய ஓட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து வந்த பாம்புதான் சிறுமியை கடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கூறியிருந்த நிலையிலும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.