ஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ் வெளியிட்ட 'ப்ரஹ்ம வித்தை' மின் நூல்..!
ஸ்வாமி ஸ்ரீ சந்த்ராங்கா அருளிய 'ப்ரஹ்ம வித்தை' மின் நூல் வெளியிடப்பட்டது..!
ஈரோடு மகேஷ், டெல்லி கணேஷ் வெளியிட்ட 'ப்ரஹ்ம வித்தை' மின் நூல்..!
உலகின் ஆன்மிகத் தலைநகரம் நமது இந்திய தேசம். அதிலும் ஆழமான ஆன்மிக உணர்வும், ஞானமும் கொண்டது நமது தமிழ்நாடு. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் அமைந்துள்ள கோவில்களும் வழிபாட்டு முறைகளுமே இதற்கு சாட்சி.
இப்படிப்பட்ட புகழுடைய நமது மண்ணில், இதுவரை எழுதப்பட்ட சாஸ்திரங்களில் தொடாத, சொல்லப்படாத, பார்க்கப்படாத விஷயங்களையும், விளக்கங்களையும் மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், அன்றாட வாழ்வில் செயல்படுத்தும் வகையில் எழுதப்பட்ட ஒரு அற்புத ஆன்மிக நூல் தான் 'ப்ரஹ்ம வித்தை'.
இந்த நூலை இயற்றிய ஸ்வாமி ஸ்ரீ சந்த்ராங்கா அவர்கள், கடந்த 40 ஆண்டுகளாக சாலியமங்கலம் அன்னை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அருளுடன், அன்னையின் வாக்காக வந்த விஷயங்களை எழுதியும், பக்தர்களிடையே உபதேசித்தும் வந்த ஆன்மிக சாதனா மார்க்கங்களை நூலாக எழுதியுள்ளார்.
இன்றைய சூழலில், ஆன்மிகம் என்பது ஆழமான தேடல் இன்றி, மேம்போக்காகப் பார்க்கும் நிலையில் உள்ளது. அதனை நீக்கி, உண்மையான ஆன்மிகத்தை உலகுக்கு உணர்த்த வந்திருக்கும் ஒரு புதிய வேதம் தான் 'ப்ரம்ஹ வித்தை'.
'ப்ரம்ஹ வித்தை' நூலை மின் பதிப்பாக ஆக்கி, அமேஸான் இணையதளத்தில் மின் நூலாக வெளியிடும் நிகழ்வு, மே 9-ம் தேதி, சென்னை தியாகராய நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மூத்த நடிகர் டெல்லி கணேஷ், திரைக்கலைஞர் ஈரோடு மகேஷ், இயக்குநர் விமர்சகர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
ஆன்மிகம் என்பது நம்பிக்கையைப்பொறுத்து மிகவும் ஆழமாகச் செயல்படும் என்று கேபிள் சங்கர் பேசினார்.
டெல்லி கணேஷ் பேசும்போது, வயதானால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தமிழில் மிகவும் ஆழமான, தெய்வத்தைப் போற்றும் பாடல்களும், இலக்கியங்களும் ஏராளமாக உள்ளன என்று அவற்றை மேற்கோள் காட்டி மிகவும் நகைச்சுவையாகப் பேசினார்.
ஈரோடு மகேஷ் பேசும்போது, ஆன்மிகம் என்பது முதலில் தன்னை அறிவது, தனக்குள்ளே பேசிக்கொள்வது. இதைத்தான் விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். காஞ்சி பெரியவர் குரு இல்லாமல் நம்மால் இறையை உணர முடியாது என்று சொல்லியிருக்கிறார். தமிழ் படித்ததால், என்னால் ஆன்மிகத்தை ஆழமாக உணர முடியும். தமிழில் இப்படி ஒரு நூல் வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்று பேசினார்.
நிகழ்ச்சியின் பொறுப்பாளர் சுரேகா சுந்தர் பேசும்போது, உலகின் சொகுசுத் தலைநகரம் அமெரிக்கா, கௌரவத் தலைநகரம் பிரிட்டன், விஞ்ஞானத் தலைநகரம் ஜப்பான், பொறியியல் தலைநகரம் ஜெர்மெனி என்ற வரிசையில் உலகின் ஆன்மிகத் தலைநகரம் இந்தியா தான்! மற்றும் , தமிழ் ஒரு மொழி அல்ல, அறிவு என்று பேசினார்.
பிரபல இசைக்கலைஞர் விஜயலட்சுமி அவர்களின் கீபோர்டு இன்னிசையுடன் நிகழ்வு துவங்கியது. மின் நூல் இணையத்தில் வெளியிடப்பட்டது. பின்னர், அதன் பென் டிரைவ் பதிப்பு வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பேச்சாளர் சுரேகா சுந்தர், ஆன்மிக ஜோதிடர். மங்கையர்க்கரசி, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோர் செய்திருந்தனர். நூலின் தொகுப்பாசிரியர் ரங்கநாதன், பதிப்பாசிரியர் மருத்துவர் இளங்கோ, பதிப்பகத்தார் ராமதாஸ், முனைவர். மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் பலதரப்பு ஆன்மிக அன்பர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.