ஆஸி. ஓபன் டென்னிஸ் போராடி வென்றார் மர்ரே
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே தகுதி பெற்றார்.
முதல் சுற்றில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியுடன் (26 வயது, 14 ரேங்க்) நேற்று மோதிய ஆண்டி மர்ரே (35 வயது, 49வது ரேங்க்) 6-3, 6-3 என முதல் 2 செட்களையும் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
அடுத்த 2 செட்களிலும் கடும் நெருக்கடி கொடுத்த பெரட்டினி 6-4, 7-6 (9-7) என வென்று சமநிலை ஏற்படுத்த, 5வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த அந்த செட்டில் 7-6 (10-6) என்ற கணக்கில் வென்ற மர்ரே 2வது சுற்றுக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 4 மணி, 49 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு முதல் சுற்றில் செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் 6-3, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கார்பாலஸ் பேனாவை எளிதாக வீழ்த்தினார்.