காசா மருத்துவமனைகள் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும்: ஜோ பைடன்
ஹமாஸ்-இஸ்ரேல் போர் உக்கிரமடைந்த வரும் நிலையில், காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையாக அல்-ஷிபா மருத்துவமனை கருதப்படுகிறது. இந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,பல பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் அல்-ஷிபா மருத்துவமனை இஸ்ரேல் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
மருத்துவனைக்கு வெளியே ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மருத்துவமனையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயல் இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இன்குபெட்டரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுடன் இஸ்ரேல் பேரம் பேசி வருவதாக தகவல் உள்ளது இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக இதுவரை காசாவில் ஆயிரக் கணக்கான குழந்தைகள் உள்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இஸ்ரேலில் இதுவரை 1,200 பேர் இறந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம்," மருத்துவமனையை பொறுத்தவரை குறைவான ஊடுருவல் நடவடிக்கை இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு. நாங்கள் இஸ்ரேலுடன் தொடர்பில் இருக்கிறோம். பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காசாவில் உள்ள மருத்துவமனைகள் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.