டோனி குறித்து நான் எந்த ஒரு தவறான கருத்தையும் கூறவில்லை: குல்தீப் யாதவ்

டோனி குறித்து நான் எந்த ஒரு தவறான கருத்தையும் கூறவில்லை: குல்தீப் யாதவ்

சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட குல்தீப் யாதவிடம் டோனியின் டிப்ஸ் உங்களது பந்து வீச்சுக்கு உதவியதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு குல்தீப் யாதவ் பதிலளிக்கையில், ‘‘டோனி எனக்கு அளித்த அறிவுரை அதிக முறை தப்பாகத்தான் முடிந்தது. அவர் சொல்வதுபோல் பந்து வீசி அது சரியாக அமையாவிட்டாலும் அதனை நீங்கள் அவரிடம் சென்று சொல்ல முடியாது.

அதுமட்டுமின்றி டோனி அதிகம் பேச மாட்டார். அதுவும் ஓவர்களுக்கு இடையேதான் வந்து பேசுவார். முக்கியமான விஷயத்தை பந்து வீச்சாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே வந்து சொல்வார்’ என்று அவர் தெரிவித்தார்’’ என்பதே அந்த செய்தி.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக கிளம்பியது. டோனி ரசிகர்கள் குல்தீப் யாதவை கடுமையாக திட்டி தீர்த்தனர். உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற குழப்பம் நிலவியதால் குல்தீப் யாதவ் உடனடியாக பதில் அளித்துள்ளார்.

மதிப்பிற்குரிய டோனி குறித்து நான் எந்தக்கருத்தும் கூறவில்லை. அந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குல்தீப் யாதவ் இன்ஸ்டாகிராமில் அளித்துள்ள விளக்கத்தில் ‘‘இங்கே, எந்தவித காரணமில்லாமல் மலிவான வதந்திகளை உருவாக்க விரும்பும் நமது மீடியாக்ளின் மற்றொரு சர்ச்சையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். சில பேரால் இந்த செய்தி பரவி வருகிறது இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. மதிப்பிற்குரிய டோனி குறித்து நான் எந்தவொரு விரும்பத்தக்காத செய்தியும் கொடுக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.