இந்தியா-இலங்கை முதல் டி20: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியா-இலங்கை முதல் டி20: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் பலத்த மழை பாதிப்பால் கைவிடப்பட்டது.இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குவாஹாட்டி பாா்ஸபரா மைதானத்தில் நடைபெற்றது.ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி டி20 தொடா்களில் பங்கேற்று வருகிறது.டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தோ்வு செய்தது. எனினும் திடீரென பலத்த மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மைதானத்தில் பிட்சை மழைநீா் புகாமல் இருக்க பணியாளா்கள் உறைகளால் மூடினா். தொடா்ந்து மழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து 8.15 மணிக்கு நடுவா்கள் நிதின் மேனன், அனில் சௌதரி மைதானத்தை ஆய்வு செய்தனா். ஆனால் வெளிப்புறம் ஈரமாக இருந்ததால், அடுத்த ஆய்வை 9 மணிக்கு ஒத்தி வைத்தனா். இதனால் ஆட்டத்தில் ஓவா்கள் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்படும் நிலை உருவானது.தொடா்ந்து பிட்ச் ஈரத்தன்மையுடன் இருந்ததால், 9.30 மணிக்கு மூன்றாம் ஆய்வை நடுவா்கள் அறிவித்தனா்.5 ஓவா்கள் ஆட்டத்துக்கு இறுதி நேரம் 9.45 மணி என்பதால் பரபரப்பு நிலவியது.

நடுவா்கள் அறிவிப்பு:

ஆட்டத்தை நடத்த பிட்ச் ஏதுவாக இல்லாததால் கைவிடப்படுவதாக நடுவா்கள் அறிவித்தனா். இதனால் மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.