ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டது பிசிசிஐ அறிவிப்பு
கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வருட ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனால் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். மேலும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோா் கரானோ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவிலும் சுமார் 70 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் ரத்து செய்யப்படுகின்றன.
ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 20 ஓவா் உள்ளூா் கிரிக்கெட் போட்டியாகும். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. வெளிநாடுகளைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனா். வரும் 29-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்குவதாக இருந்தது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை ஆகிய அணிகள் மோத இருந்தன.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு இந்திய விளையாட்டுத்துறை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியதாவது: இந்தியாவில் நடைபெறவுள்ள எல்லா சர்வதேச நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுகாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலை அனைத்து விளையாட்டுச் சங்கங்களும் பின்பற்றவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியை நாங்கள் தடுத்து நிறுத்தவில்லை. ஆனால், மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று மட்டும் கூறியுள்ளோம். நாட்டு மக்களின் சுகாதார நலனுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். ஐபிஎல் போட்டியைக் காண வரும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து நேரக்கூடாது. வேறு எதை விடவும் நாட்டின் நலன் தான் முக்கியம். ஐபிஎல் ஆட்டம் நிச்சயம் நடைபெறும் என்றால் போட்டி அமைப்பாளர்கள் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தவேண்டும். அது இல்லாமல் ஐபிஎல் போட்டியை நடத்த முடியாது. ஐபிஎல் போட்டியை நிறுத்த நாங்கள் எதுவும் சொல்லவில்லை. ஆட்டத்தை நடத்த நீங்கள் முயன்றால், விதிமுறைகளைப் பின்பற்றுங்கள் என்றுதான் சொல்கிறோம். மக்களின் உடல்நலனுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறினார்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, வரும் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்கி வரும் மே 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண வரும் பார்வையாளர்களுக்கு கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா வழங்குவதை வரும் ஏப்.15-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸ் எதிரொலியாக 2020 ஐபிஎல் டி20 தொடரில் வெளிநாட்டு வீரா்கள் பங்கேற்பது சந்தேகம் நிலவுகிறது. விசாக்கள் வழங்குவதில் புதிய விதிகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் ஆஸி, இங்கிலாந்து, நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, ஆப்கன் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 60 வீரா்கள் கலந்துகொள்ள உள்ளனா். இவா்களுக்கான விசாக்களும் ரத்து செய்யப்படுமா எனத் தெரியாமல் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.