ரயிலில் சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல முன்பதிவு வசதி அறிமுகம்
ரயிலில் சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல முன்பதிவு வசதி அறிமுகம்
சென்னை: பயணியர் ரயிலின், சரக்கு பெட்டியில் பார்சல்கள் ஏற்றிச்செல்ல, 120 நாட்கள் வரை, முன்பதிவு செய்யும் வசதியை, தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், பார்சல் முன்பதிவுக்கு, தெற்கு ரயில்வ பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதுவரை, நாள் கணக்கில் முன்பதிவு இல்லாத நிலையில், தற்போது, 120 நாட்களுக்கு முன்பாக, முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பயணியர் ரயில்களில், 8 டன் வரையும், பார்சல் ரயில்களில், 24 டன் வரையும் பார்சல்கள் ஏற்றிச் செல்லலாம். இதற்கு, 120 நாட்கள் வரை முன்பதிவு செய்யலாம்; முன்பதிவுக்கு, 10 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும்.
ரயில் புறப்படுவதற்கு, 72 மணி நேரத்திற்கு முன், மீதமுள்ள, 90 சதவீத கட்டணத்தை செலுத்தலாம். 72 மணி நேரத்துக்கு முன், முன்பதிவை ரத்து செய்தால், 50 சதவீதம் கட்டணம் திரும்ப கிடைக்கும். இந்த காலக்கெடுவுக்குள் முன்பதிவை ரத்து செய்ய தவறினால், கட்டணம் திரும்ப வழங்கப்படாது. மேலும், பயணியர் ரயில்களில் பார்சல்கள் அனுப்ப, பெட்டியில் குறிப்பிட்ட இடம், 5 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடப்படும். தற்போது, 30 நாட்கள் வரை பெட்டிளை குத்தகைக்கு எடுக்கலாம்.முன்பதிவு தொடர்பான தகவல்களுக்கு, 139 என்ற, தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என,
தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.