புற்றுநோய் இல்லாத பெண்ணுக்கு புற்றுநோய் சிகிச்சையினால் ஏற்பட்ட கொடூரம்
கொழிஞ்சாம்பாறை: கேரள மாநிலம் ஆழப்புலா மாவட்டம் கொடசநாடு பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 31). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் தனது 8 வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். ரஜினி பந்தளம் என்ற பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது வருமானத்தை வைத்தே குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரஜினியின் மார்பில் கட்டி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற அவர் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அனேகமாக கட்டி, புற்றுநோயாக இருக்கலாம் என்று கூறினர். மேலும் புற்றுநோய் பரிசோதனை செய்ய லேபுக்கு ரஜினியை அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை கூடத்தில் ரஜினிக்கு ரத்த மாதிரி மற்றும் மார்பில் ஏற்பட்ட கட்டியின் சிறுபகுதியை வெட்டி எடுத்தனர். அரை மணிநேரத்துக்கு பின்னர் ரஜினியை அழைத்த டாக்டர்கள் இங்கு பரிசோதனை முடிவுகள் கிடைக்க அதிக நாளாகும். உடனே சிகிச்சை ஆரம்பிக்க வேண்டும். அதனால் தனியார் லேப்பில் இதே பரிசோதனை செய்து அதன் ரிப்போட்டை கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தனர். புற்றுநோய்க்கான பரிசோதனை செலவு ஆயிரக்கணக்கில் ஆனது.
2 நாட்கள் கழித்து தனியார் லேப்பில் இருந்து ரிசல்ட்டை பெற்ற ரஜினி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் கொடுத்தார். அதனை பார்த்த டாக்டர்கள் புற்றுநோய் உள்ளதாக முடிவு வந்திருப்பதாக ரஜினியிடம் கூறினர். இதனையடுத்து ரஜினிக்கு ஹீமோதெரபி என்னும் சிகிச்சையை தொடங்கினர். இந்த சிகிச்சை என்பது புற்றுநோய் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கும் முறையாகும். அதன்படி ஊசி, மருந்து கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ரஜினியின் வருமானத்தை வைத்தே குடும்பம் நடந்து வந்ததால் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தனர்.
தொடர்ந்து அளித்த சிகிச்சையால் ரஜினியின் முடி உதிர்ந்தது. சிகிச்சை முறையால் முடி உதிர்கிறது என்று ரஜினி நினைத்தார். புற்றுநோய்க்கான சிகிச்சையை டாக்டர்கள் தீவிரமாக செய்து வந்தனர்.
இந்நிலையில் அரசு ஆஸ்பத்திரி பரிசோதனை கூடத்தில் இருந்து ரஜினியின் ரிப்போர்டு வந்தது. அதில் ரஜினிக்கு புற்றுநோய் இல்லை என்று இருந்தது. டாக்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அங்கு குழப்பம் ஏற்பட்டது. கோட்டயம் அரசு ஆஸ்பத்திரி ரத்தபரிசோதனை கூடத்தில் நடத்திய சோதனையில் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு ரஜினியின் ரத்தமாதிரி மற்றும் தசைகளை அனுப்பி வைத்தனர். இந்த ஆஸ்பத்திரி இந்தியாவில் புற்றுநோய்க்கு தலைசிறந்த ஆஸ்பத்திரியாகும்.
பிரச்சனைக்கு உட்பட்டது என்பதினால் பரிசோதனை விரைவாகவும், துல்லியமாகவும் நடந்தது. அங்கு நடந்த சோதனையிலும் ரஜினிக்கு புற்றுநோய் இல்லை என்று தெரியவந்தது. இல்லாத புற்றுநோய்க்கு மாதக்கணக்கில் சிகிச்சை அளித்ததால் ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ரஜினியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். டாக்டர்களிடம் இது குறித்து கேட்டபோது தவறு நடந்து விட்டதை ஒப்புக்கொண்டனர். புற்றுநோய் உள்ளது என்று அறிவித்த தனியார் லேப்பை அடித்து நொறுக்கினர். அதன் உரிமையாளர் நடக்க கூடாத தவறு நடந்து விட்டது என்று கூறினார்.
இந்த சம்பவம் கேரள முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து முதல்- மந்திரி பினராயி விஜயன், மற்றும் சுகாதார துறை மந்திரி சைலஜா ஆகியோருக்கு தெரியவந்தது.
இது குறித்து மந்திரி சைலஜா கூறும்போது, அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த ரஜினியை தனியார் லேபுக்கு அனுப்பியது முதல் தவறு. அதன் ரிப்போட்டை பெற்று அதன் அடிப்படையில் சிகிச்சை அளித்துள்ளனர். இல்லாத புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்தது மாபெரும் தவறு. தவறு செய்த டாக்டர் குழுவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட ரஜினிக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார். ரஜினி இதுவரை ரூ.70 ஆயிரம் மருத்துவ செலவு செய்துள்ளதாகவும், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறினார்.
புற்றுநோய் இல்லாத நபருக்கு ஹீமோதெரபி அளித்தால் கடும் பக்க விளைவுகள் ஏற்படும் என்று புற்றுநோய் சிறப்பு டாக்டர்கள் தெரிவித்தனர்.