ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்கைக்கான அதிநவீன வசதியை தொடங்கியுள்ளது, சிம்ஸ் மருத்துவமனை!

ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்கைக்கான அதிநவீன வசதியை தொடங்கியுள்ளது, சிம்ஸ் மருத்துவமனை!
ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்கைக்கான அதிநவீன வசதியை தொடங்கியுள்ளது, சிம்ஸ் மருத்துவமனை!
ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்கைக்கான அதிநவீன வசதியை தொடங்கியுள்ளது, சிம்ஸ் மருத்துவமனை!

· யு.கே.-யில் உள்ள “காலேஜ் ஆஃப் ஹெல்த்கேர் இன்னோவேஷன்ஸ்” உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

· இதன் மூலம் சிம்ஸ் மாணவர்கள் உயர் கல்வியின் ஒரு பகுதியை அங்கு பயிலவும், அப்பேராசிரியர்கள் இங்கு வந்து பயிற்றுவிக்கவும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன!

சென்னை, நவம்பர் 2, 2019 தமிழகத்தில் மிக அரிதான, சோதனை அடிப்படையிலான அதிநவீன மருத்துவ முயற்சிகளை (Quaternary Care) மேற்கொண்டு வரும் மருத்துவமனைகளில் ஒன்றாகிய - சென்னையைச் சேர்ந்த சிம்ஸ் (SIMS - SRM Institutes for Medical Science) மருத்துவமனை, இன்று (நவம்பர் 2, 2019) ஸ்டெம்செல் (STEM CELL) மாற்று அறுவை சிகிச்சை எனக் குறிப்பிடப்படும் தொப்புள் கொடி அடிப்படையிலான உயிரணு மாற்று சிகிச்சைக்கான தனிப் பிரிவை தமது வடபழனி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கியுள்ளது. அப்போது          யு.கே. (United Kingdom)-யில் உள்ள வேல்ஸ் (Wales) நாட்டின் பெருமைமிகு மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகிய காலேஜ் ஆஃப் ஹெல்த்கேர் இன்னோவேஷன்ஸ் (College of Healthcare Innovations, UK) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் சிம்ஸ் மருத்துவமனை கையொப்பமிட்டது.

ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு:

இந்த அதிநவீன சிகிச்சைப் பிரிவு, யு.கே.-யில் உள்ள, வேல்ஸ் நாட்டிற்கான சுகாதாரம் மற்றும் சமூக சேவைக்கான மாண்புமிகு அமைச்சர் திரு வாகன் கெத்திங் எ.எம். (Mr Vaughan Gething AM) அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தொப்புள் கொடி அடிப்படையிலான இந்த ஸ்டெம்செல் மாற்று அறுவை சிசிச்சை மற்றும் அது சார்ந்த மருத்துவ முறைகளை மேற்கொள்ள அதிநவீன வசதிகளும், உபகரணங்களும் இங்கு உள்ளதால், பல உயிர்கொல்லி நோய்களுக்கும், பிற சிக்கலான உடல் பிரச்சனைகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்க முடியும். உதாரணமாக, நீண்ட காலமாக மருத்துவ உலகுக்கு சவாலாக இருந்து வந்த ரத்தப் புற்று நோய் (Blood Cancer), நிணநீர் முனையங்களில் ஏற்படும் தீவிரப் பிரச்சனைகள் (Malignancies of the Lymph Nodes), எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய் (Cancer of the Bone Marrow) போன்ற கொடிய நோய்களுக்கும், ரத்த மாற்றம் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மரபணுக்களில் ஏற்படும் பாதிப்புகள், ரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் ஹிமோகுளோபின் அளவு குறைவு நோய் (Thalassemia and Sickle Cell Anemia), - அது பரம்பரை நோயாக தொடர்ந்தாலும்கூட, இங்கே சிகிச்சை அளிக்க முடியும்.

இது குறித்து, செய்தியாளர்களிடையே பேசிய சிம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவுக்கான இயக்குனரும், புற்றுநோய் சிகிச்சை அளிப்பதில் முன்னோடியுமான மரு. ரஞ்ஜன் குமார் மஹோபத்ரா, “இந்த நவீன மையம், சர்வதேசத் தரத்திலான அதி நவீன சிகிச்சை வசதிகளை இந்தியாவிலேயே வழங்கும் திறன் பெற்றுள்ளது. ஸ்டெம்செல் அடிப்படையிலான அனைத்து சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் திறனும், அதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தற்போது இங்கே உள்ளன. ரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்க - வெளியுலக பாதிப்பு இல்லாத முற்றிலும் பாதுகாப்பான தனி வசதிகள், புற்றுநோய் சிகிச்சையின்போது சிலருக்கு ஏற்படும் அரிதான பக்க விளைவு பிரச்சனைகள் போன்ற அனைத்தையும் கையாளும் வாய்ப்பும் திறனும் பெற்றவர்கள் இங்கு உள்ளனர். நான்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், இரண்டு கதிரியக்க சிகிச்சை மருத்துவர்கள், மற்றும் புற்றுநோய் தொடர்பான அடிப்படை மருத்துவர் என பல வசதிகளோடு, சென்னையில் புற்றுநோய்க்கான பன்முகத் தன்மை கொண்ட அதிநவீன மருத்துவமனையாக சிம்ஸ் இன்று மேம்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.  

“குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களிடம் இருந்தும் ஸ்டெம்செல்களைப் பிரித்து எடுத்து, அதைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் வசதி இங்கு உள்ளது. தற்போது இந்த வசதியை வழங்கும் மற்ற மருத்துவமனைகளின் செலவை விட குறைந்த செலவிலேயே இங்கு இந்தவிதமான சிகிச்சைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்” என்று மேலும் அவர் தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:

யு.கே.-யில் உள்ள, வேல்ஸ் நாட்டின் “காலேஜ் ஆஃப் ஹெல்த்கேர் இன்னோவேஷன்ஸ்” உடன் சிம்ஸ் மருத்துவமனை செய்து கொண்டுள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு அமைப்புகளிடையே ஏற்படும் புதிய சர்வதேச உறவுக்கான தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மருத்துவக் கல்வி மற்றும் அதன் நிர்வாகத்தில் இந்த இரு நிறுவனங்களிடையே பரஸ்பர ஒத்துழைப்பையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

இந்த ஒப்பந்தத்தில் வேல்ஸ் நாட்டின் ‘காலேஜ் ஆஃப் ஹெல்த்கேர் இன்னோவேஷன்ஸ்’ சார்பில் அதன் திட்ட இயக்குனர் பேராசிரியர் மரு. கேசவ் சிங்கல் (Prof. Keshav Singhal) அவர்களும், சிம்ஸ் மருத்துவமனை சார்பில் அதன் துணைத் தலைவர் மரு. ராஜூ சிவசாமி அவர்களும் கையொப்பமிட்டனர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் திரு ரவி பச்சமுத்து பேசுகையில், “சிம்ஸ் குடும்பத்தின் கிரிடத்தில் இந்த ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு இன்னொரு கூடுதல் அணிகலனாகச் சேர்கிறது. உயிரணுக்களின் மரபியல் சேர்க்கை கோளாறுகளால் ஏற்படும் புற்றுநோயில் இன்று 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவை அனைத்திலுமே புற்றுநோய், கட்டிகளாக உருவாவதில்லை. உதாரணமாக ரத்தப் புற்றுநோயைச் சொல்லலாம். ஒவ்வொரு வகைப் புற்றுநோயும் தனி ரகம். அதனால், அவற்றுக்கான சிகிச்சை முறையும் மாறுபட்டவையாக உள்ளன. கடந்த காலங்களைப் போல அல்லாமல், இன்று புற்றுநோய்க்கான சிசிச்சை முறை மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. பெரும்பாலான புற்றுநோய்க்கான சிகிச்சைகள் சாத்தியமாகியுள்ளன. இது ஏராளமான நோயாளிகளுக்கு மீண்டும் இயல்பு வாழ்க்கையைத் திரும்பப் பெற முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது” என்றார்.

“புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறத் தொடங்கிவிட்டால், அதிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த நோயின் தொடக்கத்தைக் கண்டறிவதற்கான சோதனைகளை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும். அதேபோல, இந்த நோய் தொடர்பான அறிகுறிகள் எதுவும் தெரிந்தாலும், உடனடியாக சிறப்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்” எனவும் குறிப்பிட்டார். 

வேல்ஸ் நாட்டின் அமைச்சரான திரு வாகன் கெத்திங் எ.எம்., புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு, மறுவாழ்வு பெறுவதை மேம்படுத்த சிம்ஸ் மருத்துவமனை மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார். அதோடு, முன்னதாக கண்டறிவது ஒன்றுதான் இந்த நோய்க்கான சிறந்த சிகிச்சைக்கு முக்கியம் என்பதையும் வலியுறுத்தினார். எனவே, இந்த நோய்க்கான அறிகுறிகள் உள்ளனவா என்பதை முன்னதாகவே தற்காப்பு சோதனைகளில் கண்டறிய வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மருத்துவத் துறையில் சர்வதேச அளவில் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வளர்த்தெடுக்கும். அதோடு, இந்தியா மற்றும் வேல்ஸ் நாட்டின் மருத்துவ மாணவர்கள் தங்களது கல்வித் திட்டப்படி மருத்துவ அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், அதை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு பயன் அடையவும் வழிகளை ஏற்படுத்தும். இதுதவிர, இந்த இரு மருத்துவமனைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய மூத்த மருத்துவர்கள் தங்களது அறிவை மேம்படுத்திக் கொள்ள விரும்பினால், அதற்கான குறுகிய மற்றும் விரிவாக்க உயர்கல்வி வாய்ப்பைப் பெறவும் வகை செய்யும். மேலும், இருதரப்பு கூட்டு ஆராய்ச்சிப் பணிகளில் அந்தந்த நிறுவனங்களின் மாணவர்கள் மட்டுமின்றி, மருத்துவர்கள், பிற பணியாளர்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு அதன் மூலம் மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் முறைகளை அவர்கள் நேரடியாக பார்த்து, உணர்ந்து தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகளை உருவாக்கும்” எனவும் தெரிவித்தார்.

வேல்ஸ் நாட்டின் ‘காலேஜ் ஆஃப் ஹெல்த்கேர் இன்னோவேஷன்ஸின்’ திட்ட இயக்குனரும், பேராசிரியருமான மரு. கேசவ் சிங்கல் பேசுகையில், “இந்த ஒப்பந்தத்தின்படி கல்விமுறை மற்றும் பாடத் திட்டத்தில் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளதன் மூலம், முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களை இரு நிறுவனங்களும் பரிமாறிக் கொள்ள இயலும். அதனால், சிம்ஸ் மாணவர்கள் வேல்ஸிலும், அங்குள்ள மாணவர்கள் சென்னையிலும் கல்வி பயில முடியும். அதோடு, பட்டப்படிப்பு நிலையில் உள்ள எங்களது மாணவர்களும், அவர்களது பேராசிரியர்களும் சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு வந்து இங்கே பயிற்சி கொடுக்கவும், பெறவும் வாய்ப்புகள் உருவாகும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே போல, இங்குள்ள மாணவர்களையும் நாங்கள் எங்களது மருத்துவக் கல்லூரிக்கு வரவேற்கிறோம். இது தமிழகத்திற்கும் வேல்ஸ் நாட்டிற்குமான நல்லுறவை வலுப்படுத்தும். இதன் மூலம் கல்வி மற்றும் பாடத்திட்டங்களில் மட்டுமின்றி, கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களின் தேவைகளையும் பகிர்ந்து கொள்ளவும் பரஸ்பர நட்பு, கூட்டுறவை மேம்படுத்தவும் வழிபிறக்கும்” எனவும் தெரிவித்தார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

·         பட்டப்படிப்பு மாணவர்கள், ஆராய்ச்சிப் பணியாளர்கள், மற்றும் பேராசிரியர்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்புகளை அடையாளம் காணுதல்.

·         குறுகிய கால மற்றும் விரிவாக்க உயர்கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களை பரஸ்பரம் வழங்கி, அதன் மூலம் அவர்கள் தங்களது உயர்கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ளும் திட்டங்களை உருவாக்க உதவுதல்.

·         பட்டப்படிப்பு நிலையிலும், தொடர்கல்வி மற்றும் வசதிக்கேற்ப தொலைக்கல்வி போன்றவற்றில் மாணவர்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் திட்டத்தை மேம்படுத்துதல்.

·         இருதரப்புக்கும் ஆர்வமுள்ள விஷயங்களில், துறைகளில் பரஸ்பரம் தகவல் பரிமாற்றத்துக்கு வகை செய்தல்

·         தேர்ந்தெடுத்தத் துறைகளில் ஆராய்ச்சிப் பணி மேற்கொள்வதில் பயிற்சிக்கு ஒத்துழைப்பது, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளும் பயிற்சியில் ஒத்துழைப்பது போன்றவை குறித்து ஆராய்தல்.

மருத்துவம் தொடர்பான பல்வேறு நிலை பாடத்திட்டங்களை உருவாக்குவதில் ஆலோசனை வழங்குதல்.