மதுரை அழகர்கோவிலில் சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம் கோலாகலம்
அழகர்கோவில்: பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க அழகர்கோயிலில் சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை அருகே, அழகர்கோவிலில் திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை திருவிழா, ஆடித்தேரோட்டம், பங்குனி மாத திருக்கல்யாண திருவிழா ஆகியவை முக்கிய விழாக்களாகும்.
இந்தாண்டு திருக்கல்யாண திருவிழா கடந்த மார்ச் 22ல் துவங்கியது. அன்று முதல் தினசரி மாலை வேளையில் தேவி, பூதேவியுடன் பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி நந்தவன, ஆடி வீதிகள் வழியாக வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி, காலை 7 மணிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்த பின் சுந்தரராஜ பெருமாள் தேவி, பூதேவி, ஆண்டாள், கல்யாண சுந்தரவல்லி தாயாருடன் கோயில் உள்பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு பட்டர்கள் வேத மந்திரம் முழங்க, மணமேடை அருகே ஹோமம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து மணமக்களுக்கு புதுப்பட்டாடை அணிவிக்கப்பட்டு காலை 9.30 மணிக்கு பெரியாழ்வார் முன்னிலையில், சுந்தரராஜ பெருமாள் திருக்கரத்தில் இருந்து திருமாங்கல்யம் மூன்று முறை உயர்த்தி காண்பிக்கப்பட்டு தேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது. அப்போது ‘கோவிந்தா… கோவிந்தா…’ என பக்தர்கள் கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் முடிந்ததும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அப்போது பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று இரவு பெருமாள் தேவியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நாளை மஞ்சள்நீர் சாற்றுதலுடன் விழா நிறைவடைகிறது
இதற்கான ஏற்பாடுகளை அங்காவலர் குழு தலைவர் வெங்கடாச்சலம், கோயில் துணை ஆணையர் கலைவாணன் மற்றும் கண்காணிப்பாளர் பிரதீபா, அருள்செல்வன், அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பக்தர்களுக்கு அறுசுவை விருந்து
திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இரண்டு வகை கூட்டு, சாம்பார், ரசம், தயிர், அப்பளம், பாயாசத்துடன் அறுசுவை உணவு பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது. விருந்து முடிந்தவுடன் மணமக்களுக்கு பக்தர்கள் மொய் எழுதினர்.