இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது
இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது : கமல்ஹாசன் ட்வீட்!
தமிழ்நாட்டை சேர்ந்த விகாஷ் என்பவர், சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவர் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் சொமோட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தை அணுகியுள்ளார். , அப்போது மொழி பிரச்னை இருப்பதாக சொமோட்டோ நிறுவனம் கூற, தமிழ்நாட்டில் சேவை வழங்கும் நீங்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்தி இருக்க வேண்டும் என விகாஷ் கூறியுள்ளார். இதற்கு, ‘இந்தி நாட்டின் தேசிய மொழி என்றும், ஆகவே அனைவரும் இந்தி மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது பொதுவானது’ என சொமேட்டோ ஊழியர் பதிலளித்துள்ளார்.
ஊழியரின் இந்த பதில் கடும் சர்ச்சையான நிலையில், சொமேட்டோவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், உடனடியாக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட Zomato நிறுவனம், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் இது தொடர்பாக மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நமக்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை. என்றாலும் இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது. தெளிவுபடுத்த வேண்டியது நடுவண் அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.