சரணடையும் பேச்சுக்கே இடமில்லை - உக்ரைன் திட்டவட்டம்

சரணடையும் பேச்சுக்கே இடமில்லை - உக்ரைன் திட்டவட்டம்
சரணடையும் பேச்சுக்கே இடமில்லை - உக்ரைன் திட்டவட்டம்

மரியுபோல் நகரில் சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என உக்ரைன் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், அங்கு போர் குற்றங்களில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாக அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 26-வது நாளை எட்டியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி வருகிறது. ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகளை குறி வைத்து தாக்குவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. மரியுபோலில் 90 சதவிகித கட்டடங்கள் தாக்குதலில் உருக்குலைந்துள்ளன. அங்கு 3 லட்சம் பேர் மின்சாரம், குடி நீர் மற்றும் உணவு இன்றி சிக்கி தவிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, சரணடைய வேண்டும் என ரஷ்யா கெடு விதித்தது. சரணடைந்தால், மரியுபோல் மக்கள் வெளியேற பாதுகாப்பான வழித்தடங்கள் அமைத்து தரப்படும் என்றும் ரஷ்யா கூறியது. இதனை நிராகிரத்துவிட்ட உக்ரைன், ஆயுதங்களை கீழே போடுவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் முன்னர் மக்கள் வெளியேற்றத்தின் போது தாக்குதல் நடத்தியதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

மரியுபோல் நகரில் ரஷ்யா போர் குற்றங்களில் ஈடுபட்டுவருவதாக அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். நேரிடையான பேச்சுவார்த்தைக்கு தான் தயாராக உள்ளதாகவும் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதனிடையே இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் காணொலி வாயிலாக உரை நிகழ்த்திய செலன்ஸ்கி, ஜெர்மனியில் நாஜி படைகள் யூதர்களை ஒழித்தது போல் தற்போது ரஷ்யா உக்ரேனியர்களை ஒழிக்க திட்டமிட்டு வருவதாக கூறினார்.