தென் இந்திய வீரர்களை மட்டம் தட்டுவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ?- முரளி விஜய் காட்டம்

தென் இந்திய வீரர்களை மட்டம் தட்டுவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ?- முரளி விஜய் காட்டம்
தென் இந்திய வீரர்களை மட்டம் தட்டுவதை எப்போதுதான் நிறுத்துவார்களோ?- முரளி விஜய் காட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ரோஹித் சர்மா தன் முதல் சதத்தை அபாரமான ஒரு இன்னிங்சில் எடுத்ததன் மூலம் வர்ணனை அறையில் அரைசதங்களை சதமாக மாற்றும் திறன் படைத்த வீரர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் விவாதத்திற்கு வந்த போது சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறிய ஒரு வார்த்தை தென் இந்தியர்களை குறைத்து எடைபோடுவதாக அமைந்துள்ளதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இந்திய தொடக்க வீரர் முரளி விஜய் தன் காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

நேற்று 2ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அறிமுக ஆஃப் ஸ்பின்னர் தன் அனுபவ சகா நேதன் லயனைக் காட்டிலும் சிறப்பாக வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுவும் வந்தவுடன் இரவுக்காவலன் அஸ்வினையும், புஜாராவையும் வீழ்த்தினார். பிறகு பரிசு விக்கெட்டான விராட் கோலியையும், அறிமுக விக்கெட் கீப்பர் ஸ்ரீகார் பரத்தையும் வீழ்த்தி 5 விக்கெட்டுகளை அறிமுக டெஸ்ட்டிலேயே கைப்பற்றி சாதனை புரிந்தார்.

ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா உண்மையில் அனாயசமாக, அலட்டிக் கொள்ளாத வகையில் ஒரு செஞ்சுரியை விளாசினார். அவர் 15 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 212 பந்துகளில் 120 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்மித் ஸ்லிப்பில் கேட்சை விட்டார், ஆனால் அதே ஓவரில் கமின்ஸ் வீசிய ஃபுல் லெந்த் ஸ்விங் பந்தில் ஸ்டம்புகள் நடந்து சென்று சில அடிகள் தள்ளி விழுந்தன. ரோஹித் வெளியேறினார்.

இவர் சதம் அடித்தவுடன் அரைசதங்களை சதமாக மாற்றுவது பற்றிய புள்ளி விவரப்பட்டியல் காண்பிக்கப்பட்டது, அதாவது இந்தியாவில் குறைந்தது 10 அரைசதங்களையாவது அடித்துள்ள வீரர்களின் கன்வர்ஷன் ரேட் பற்றிய புள்ளி விவரம் அது. இதில் அரைசதங்களை சதமாக மாற்றுவதில் உள்நாட்டில் ரோஹித் சர்மா 50% என்றும் விராட் கோலி 52% என்றும் புள்ளி விவரங்கள் கூறின. ஆனால் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தமிழ்நாட்டு வீரர் முரளி விஜய். இவர் டெஸ்ட்களில் 30 போட்டிகளில் 6 அரைசதங்கள் 9 சதங்கள் அடித்துள்ளார். இவரது கன்வர்ஷன் ரேட் 60%.

இவருக்கு அடுத்த இடத்தில் முகமது அசாருதீன் 54.2%, பாலி உம்ரீகர் 53.8%, விராட் கோலி 52%, ரோஹித் சர்மா 50% என்று அட்டவணைக் காட்டப்பட்டது. உடனே வர்ணனையில் இருந்த சஞ்சய் மஞ்சுரேக்கர், “ஓ! டாப்பில் முரளி விஜய், ஆச்சரியமாக இருக்கிறது” என்று மிகவும் ஆச்சரியப்பட்டார். ஆனால் இந்த ஆச்சரிய தொனி முரளி விஜய்க்கு உவப்பானதாக இல்லை.

இதற்கு எதிர்வினையாற்றிய முரளி விஜய் தன் ட்விட்டர் பக்கத்தில், "Some Mumbai ex players can never be appreciative of the south ! #showsomelove #equality #fairplayforall @sanjaymanjrekar @BCCI" சில மும்பை முன்னாள் வீரர்கள் தென் இந்தியர்களைப் பற்றி ஒருபோதும் பாராட்டிப் பேசியதில்லை என்று முரளி விஜய் ஆதங்கமாகத் தெரிவித்துள்ளார்.