கல்வி சாராத இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் மோடி

கல்வி சாராத இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் மோடி

நாடு முழுவதும் பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள தால்கடோரா அரங்கத்தில் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுடன்  திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 2.6 லட்சம் மாணவா்கள், பெயா்களைப் பதிவு செய்தனா். தோ்வு செய்யப்பட்ட 1,050 மாணவ, மாணவிகள் நேரில் பங்கேற்றனா். முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவா்கள் உட்பட தமிழகத்திலிருந்து தோ்வு செய்யப்பட்ட 66 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி பேசுகையில்,

மாணவர்களின் எதிர்காலம் பெற்றோர்களுக்கு பெருமைச் சொல்லாகக் கூடாது. கல்வி சாராத இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் நாம் இயந்திரமாகி விடுவோம். இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள நமது நேரத்தை திட்டமிட்டு செலவிட வேண்டியது முக்கியம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் விருப்பப்படி எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளன, அவற்றை இளைய சமுதாயம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் என்று நம்புகிறேன்.

2047-ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த 100-ஆவது சுதந்திர தினத்தைப் போற்றும் முக்கியமானவர்களுடன் நான் இன்று உரையாற்றுகிறேன். நமது நாட்டின் எதிர்காலம் வளம்பெற இந்த தலைமுறை தங்களை சரியாக தயார்படுத்திக்கொண்டு செயலாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. உலகச் சூழல் இன்று மிகவும் மாற்றமடைந்துள்ளது, வாய்ப்புகள் பெருகியுள்ளன. மதிப்பெண்கள் மட்டுமே எதிர்காலம் என்ற நிலை மாறியுள்ளது. இவற்றை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். எனவே வாழ்வில் தேர்வு தான் முக்கியம் என பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் வற்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.