மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிரமமின்றித் தேர்வெழுத சிறப்புச் சலுகைகள்
2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுத சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் ஒரு மணி நேரம்
டிஸ்லெக்சியா பாதிப்புள்ள மாணவர்கள், கண் பார்வையற்றோர், காது கேளாதோர்/ வாய் பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்காக சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப் பாட விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வெழுத கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்கி அரசுத் தேர்வுத் துறை ஆணையிடப்பட்டுள்ளது.
தரைத் தளத்தில் தனி அறையில் தேர்வு
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தேர்வு மையங்களில் தரைத் தளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 12-ம் வகுப்புத் தேர்வெழுதும் சுமார் 3,330 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் அனைவருக்கும் இந்தச் சலுகைகள் பொருந்தும்.
அதேபோல 11-ம் வகுப்புப் பொதுத்தேர்வெழுதும் சுமார் 3,175 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் இந்தச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 6,184 பேருக்கு இதே சலுகைகள் அளிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசாணையின்படி சலுகை வழங்கப்படும் என்ற அறிவுரை அனைத்துத் தேர்வர்களுக்கும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டிலேயே அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.