வாகன உதிரிபாகத் துறை வருவாய் கடும் சரிவு

 வாகன உதிரிபாகத் துறை வருவாய் கடும் சரிவு

வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. நிதி ஆண்டின் இரண்டாம் பாதியிலும் நிலைமை சீரடைய வாய்ப்பில்லை’ என்று வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தீபக் ஜெயின் தெரிவித்துள்ளார்.

தவிர, அடுத்த நிதி ஆண்டின் முதல் பாதிவரையிலும் இதே நிலைதான் நீடிக்கும் என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தற்போதைய பொருளாதார சூழலில் வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கான எந்த சாத்தியமும் இல்லை. நடப்பு நிதி ஆண்டு முழுமைக்கும் இந்நிறுவனங்கள் தொடர் சரிவிலேயே இருக்கும்.

ஏற்கெனவே ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதி ஆண்டில் முதல் பாதியில் இந்நிறுவனங்களின் வளர்ச்சி 10 சதவீதம் சரிந்துவிட்டது. இந்நிலையில் அடுத்த பாதியில் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பில்லை. தவிர, வளர்ச்சி (-) எதிர்நிலைக்கு செல்லும்’ என்று அவர் தெரிவித்தார்.

3.5 லட்சம் பேர் வேலை இழப்பு கடந்த ஓராண்டாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளன. வாகன விற்பனை சரிந்ததால் பல நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துவிட்டன. அதன் நீட்சி யாகவே உதிரி பாக நிறுவனங்களும் பாதிப்பை சந்தித்து உள்ளன.

இந்த சூழல் காரணமாக வாகன தயாரிப்பு தொடர்புடைய 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். குறிப்பாக வாகன உதிரி பாக தயாரிப்பு தொடர்புடைய 1லட்சம் ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர். வாகன உதிரி பாக தயாரிப்பு நிறுவனத்தின் வருவாய் சென்ற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ரூ.1.99 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.1.79 லட்சம் கோடியாக சரிந்து உள்ளது.