இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 3-வது டெஸ்ட் போட்டியைக் காண ராணுவ வீரர்களுக்கு 5 ஆயிரம் இலவச டிக்கெட்கள்: ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு
ராஞ்சி ஜார்க்கண்டில் நடைபெறவுள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியைக் காண்பதற்காக ராணுவ வீரர்களுக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்படவுள்ளன. இதுதொடர்பான அறிவிப்பை ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.
விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டிஸ் 203 ரன்கள் வித்தி யாசத்திலும், புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி கண்டு தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கவுள்ளது.ராஞ்சியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்நிலையில் தற்போது இந்த மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த கடைசி டெஸ்ட் போட்டியை ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள், என்.சி.சி. வீரர்கள் என 5 ஆயிரம் பேருக்கு இலவச டிக்கெட் வழங்க ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் கூறும்போது, 'பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கிரிக்கெட் போட்டியை காண இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது.
ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் என்.சி.சி. படையினர் என 5 ஆயிரம் பேருக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும்' என்றார்.