அடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்!!

அடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்!!

காஷ்மீர் விஷயத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே மூன்றாவது அணி தலையீடு இருக்கக் கூடாது. அடுத்த மாதம் இந்தியாவுக்கு முதல் கட்ட ரபேல் விமானங்கள் அனுப்பப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். ஜி -7 மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நாளை முதல் திங்கள் கிழமை வரை நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன. பிரான்சு பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்துப் பேசினார். இவர்களது சந்திப்பின்போது, காஷ்மீர் தொடர்பாக பேசப்பட்டது. 

காஷ்மீர் விஷயத்தில் மூன்றாவது அணியின் தலையீடு இருக்கக் கூடாது. மூன்றாவது நபரின் கலவரம் தூண்டும் சம்பவங்களும் அங்கு நடைபெறக் கூடாது என்று மோடியிடம் இம்மானுவேல் தெரிவித்துள்ளார் . 

இருநாட்டு தலைவர்களின் சந்திப்பில் மோடியிடம், ''இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் காஷ்மீர் விஷயத்தை பொறுமையாக அமர்ந்து பேச வேண்டும். காஷ்மீர் பிரச்சனை இருநாடுகளுக்கும் இடையே மோசமான நிலையை உருவாக்கி சிக்கலுக்கும், பதட்டத்துக்கும் இட்டுச் செல்லக் கூடாது. இருநாடுகளின் எல்லையில் இருக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நலனில் பிரான்ஸ் அக்கறை கொண்டுள்ளது. தொடர்ந்து கண்காணித்து வரும்'' என்று இம்மானுவேல் தெரிவித்துள்ளார். மேலும், ''மக்களின் உரிமைய பாதுகாக்க வேண்டும். காஷ்மீர் விஷயம் குறித்து இன்னும் சில நாட்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பேசுவேன். இருநாடுகளும் கருத்து ஒருமித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொள்வேன். இந்தியாவும், பிரான்சும் இணைந்து தீவிரவாதத்தை எதிர்த்து போரிடும்'' என்று இம்மானுவேல் தெரிவித்துள்ளார். 

இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நடந்தது. பின்னர் மோடி, இம்மானுவேல் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் 36 போர் விமானங்கள் வாங்குவதற்கு இருதரப்பிலும் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, அடுத்த மாதத்தில் சில போர் விமானங்கள் இந்தியா வருகிறது. இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையிலான நட்பு சுயநலத்தில் அமைந்தது அல்ல. சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது என்று இம்மானுவேல் குறிப்பிட்டுள்ளார். 

மோடி பேசுகையில், ''தீவிரமயமாக்கலை தொடர்ந்து எதிர்ப்போம். எங்களுக்கு பிரான்ஸ் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. பிரான்ஸ், இந்தியா இரண்டுமே தீவிரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க எங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியதற்காக பிரான்ஸ் அதிபருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியாவுக்கான முதல் ரபேல் விமானம் கிடைக்கப்பெறும்'' என்றார்.