அரசியல்உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு குறித்து இன்று மாலை ஆலோசனை கூட்டம்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் இன்று மாலை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். வாக்கு இயந்திரம் பரிசோதனை, வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி இறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதன்படி தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தல் உள்ளட்ட பணிகள் தொடர்பாக உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. மாநில ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் அங்கீகரிப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது மேலும் ஊரக பகுதிகளில் 5 வண்ணங்களில் வாக்குசீட்டுகள் பயன்படுத்தப்படும் என்றும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டது. அதேபோல, தேர்தலில் பயன்படுத்தப்படும் வேட்புமனு தாக்கல் படிவம் உள்ளிட்ட பல்வேறு படிவங்களை உடனடியாக பெற்று கொள்ள வேண்டும் என்றும் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் 2வது முறையாக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இன்று மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாமா என்பது குறித்து இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.