`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்!'- மீண்டும் ஒருமாத பரோலில் பேரறிவாளன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட ஏழு பேரும் கடந்த 28 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவருகிறார்கள். வேலூர் மத்தியச் சிறையில் இருந்த பேரறிவாளன் சிறுநீரகப் பிரச்னை, மூட்டு வலி ஆகியவற்றால் கடுமையாக அவதிப்பட்டார்.
வேலூர் மத்தியச் சிறை:உடல் பிரச்னை குணமாகாததால், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்தபடியே ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்தநிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தை குயில்தாசனை பார்க்கவும் சகோதரி மகளின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகவும் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் பேரறிவாளன். இதற்குத் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, புழல் மத்திய சிறை நிர்வாகம் பேரறிவாளனை ஒரு மாத பரோலில் வெளியில் அனுப்ப முடிவுசெய்தது.
இன்று காலை புழல் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்டார் பேரறிவாளன். அங்கு, சில நடைமுறைகள் முடிவுற்ற பிறகு ஜோலார்பேட்டையில் உள்ள அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாய் அற்புதம்மாள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி பொங்க அவரை வரவேற்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு தந்தை குயில்தாசனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் 28 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, முதன்முறையாக ஒரு மாதம் பரோலில் வெளியில் வந்தார் பேரறிவாளன். அதைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக இப்போதுதான் பரோல் கிடைத்திருக்கிறது.
`ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது; அமைப்பு சார்ந்த நிர்வாகிகளைச் சந்திக்கக் கூடாது; பொது இடங்களுக்குச் செல்லக் கூடாது' என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறது சிறைத்துறை நிர்வாகம்.