அரசு விழாவில் தேசிய கீதம் பாடியபோது செல்போன் பார்த்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

அரசு விழாவில் தேசிய கீதம் பாடியபோது செல்போன் பார்த்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
அரசு விழாவில் தேசிய கீதம் பாடியபோது செல்போன் பார்த்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

நாமக்கல்லில் கடந்த 28-ந் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொம்மை குட்டை மேட்டில் நடந்தது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் கலெக்டர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழா நிறைவு பெற்றதும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் என்பவர் சேரில் அமர்ந்தபடியே செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனை பார்த்த சக போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலை செல்வன் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும் சிவப்பிரகாசத்தை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் தேசிய கீதத்திற்கு அவமரியாதை செய்ததாக கூறி சிவப்பிரகாசத்தை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டார்.

சஸ்பெண்டான சிவப்பிரகாசம் ஏற்கனவே வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் தற்போது பணியாற்றி வந்த நிலையில் மீண்டும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.