காங்கிரஸ் எம்.பி.,க்கள் நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் ஆலோசனை

காங்கிரஸ் எம்.பி.,க்கள் நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் ஆலோசனை
காங்கிரஸ் எம்.பி.,க்கள் நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் ஆலோசனை

ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் இன்று (திங்கள்கிழமை) காலை 10.30 மணியவில் நாடாளுமன்றத்தில் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

முன்னதாக கடந்த வாரம் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 10.30 மணியவில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

அதற்கு முன்னதாக ஒருமித்த கருத்து கொண்ட எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் காலை 10 மணியளவில் சந்திக்கின்றனர். அதேபோல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு கருப்புச் சட்டை அணிந்துவந்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.

முன்னதாக நேற்று நாடு முழுவதும் அமைதிவழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுத்தது. கேரள மாநிலம் வயநாட்டில் தீப்பந்தம் ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, குஜராத் மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்தது. ஆனால் பாஜகவோ, சட்டத்தின்படி ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் போராட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது.